விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. இதையொட்டி விழுப்புரம் எஸ்பி-யான தீபக் ஸ்வாட்ச் தலைமையில் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அத் தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் பிரச்சாரம் ஜூலை 8-ம் தேதி நிறைவுற்ற நிலையில், ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே வாக்குப்பதிவு மையத்துக்கு ஆர்வத்துடன் சென்ற வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தினர்.

இத்தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் 95,536 ஆண் வாக்காளர்கள், 99,444 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 1,95,495 பேர் மட்டுமே வாக்களித்தனர். இது 82.48 சதவீத வாக்குப்பதிவாகும். வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 572 வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்டவை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து சீல்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் வெளி வளாகப் பகுதி, சாலைகள், பிற இடங்கள், விக்கிரவாண்டி நகரப் பகுதிகளில் விழுப்புரம் எஸ்பி-யான தீபக் ஸ்வாட்ச் தலைமையில் போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கையின் போது அங்கு 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை காலை 8 மணியளவில் வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. மொத்தம் 20 சுற்றுகளாக எண்ணப்பட்டு நாளை மதியத்துக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE