ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து ஐகோர்ட் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்: திடீர் பேரணியால் போக்குவரத்து பாதிப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதியன்று பெரம்பூரில் அவரது வீடு அருகே ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் பகுதியில் இன்று நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர். கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் ராஜேஷ் மற்றும் நூலகர் ரகு உள்பட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். பிற வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

என்எஸ்சி போஸ் சாலையில் வழக்கறிஞர்கள் திடீரென கோஷம் எழுப்பியவாறு உயர் நீதிமன்றத்தை சுற்றிலும் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை ஊர்வலம் செல்ல அனுமதித்தனர்.

அவர்கள், கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு உயர் நீதிமன்றத்தைச் சுற்றி வந்து பின்னர் ஆவின் நுழைவாயில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான ஜி.மோகனகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE