சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட் நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வரும் கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா கடந்த மே மாதம் பணிஓய்வு பெற்றார். அதையடுத்து மூத்த நீதிபதியான ஆர்.மகாதேவன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வரும் கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராமை (கே.ஆர்.ஸ்ரீராம்) நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 1963 செப்டம்பர் 28 அன்று மும்பையில் பிறந்த கே.ஆர்.ஸ்ரீராம், மும்பை பல்கலைக்கழகத்தில் சட்ட இளநிலை படிப்பை முடித்தவர். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் கடல் சார் சட்டத்தில் சட்ட முதுநிலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதன்பிறகு மகாராஷ்டிரா - கோவா பார் கவுன்சிலில் 1986-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த இவர், மூத்த வழக்கறிஞர் எஸ். வெங்கிடேஸ்வரனின் அலுவலகத்தில் ஜூனியராக பணியாற்றியுள்ளார்.

கடல் சார் சர்வதேச வணிகம், துறைமுகம் மற்றும் சுங்கத் துறை, மோட்டார் வாகனச் சட்டம், நிறுவனச் சட்டம் போன்றவற்றில் இவர் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதியன்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.ஆர்.ஸ்ரீராம் தற்போது மூன்றாவது மூத்த நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

அடித்தட்டு மக்களுக்கு சேவையாற்றுவதில் அதீத அக்கறை கொண்ட நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், தர்மிஸ்தா மித்ரன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார். சிறந்த கோல்ப் விளையாட்டு வீரரான இவர், இந்தியா மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE