அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிப்பட்டு பேருந்து நிலையம்

By இரா.நாகராஜன்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் ஒன்றாக விளங்குகிறது, பள்ளிப்பட்டு பேரூராட்சி. ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள இந்த பேரூராட்சி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து, திருத்தணி, பொதட்டூர்பேட்டை, திருவள்ளூர், சென்னை, வேலூர், சோளிங்கர், காஞ்சிபுரம் மற்றும் புத்தூர், சித்தூர், நகரி, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனால், பள்ளிப்பட்டு பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த பேருந்துநிலையம் போதிய பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அவதியுற்று வருவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் தெரிவிக்கையில், ’நாள்தோறும் பணியிடங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவைக்காக திருத்தணி, சென்னை, நகரி, சித்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தையே பயன்படுத்தி வருகிறோம். வட்டத் தலைநகராகவும், ஊராட்சி ஒன்றிய தலைநகராகவும் விளங்கும் பள்ளிப்பட்டுக்கு, பள்ளிப்பட்டுவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரில், ஆயிரக்கணக்கானோர் மருத்துவ வசதி போன்ற அத்தியாவசிய தேவை உள்ளிட்டவைக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்பவர்கள் இந்த பேருந்து நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால், பயணிகள் அமருவதற்காக 9 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பயணிகள் இருக்கைகள் மாயமாகிவிட்டன. மின் விசிறிகள் இருக்கின்றன. ஆனால், சுழல்வதில்லை. குறைந்த அளவில் உள்ள மின்விளக்குகளும் பெரும்பாலான இரவு வேளைகளில் எரிவதில்லை’’ என்கின்றனர்.

சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், ``கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய இடத்தில் இருந்து வந்தது பள்ளிப்பட்டு பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில், 20 கடைகள் கொண்ட வணிக வளாகத்துடன் மேம்படுத்தியது. அவ்வாறு மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து முறையாக பராமரிக்கவில்லை.

இதனால், குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது பள்ளிப்பட்டு பேருந்து நிலையம். இதனால், நாள்தோறும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வரும் முதியோர், நோயாளிகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பயணிகள்மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

ஆகவே, பள்ளிப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கைகள் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவேண்டும்’’ என கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து, பள்ளிப்பட்டு பேரூராட்சி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ``பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி நிதி ஒதுக்கீடு செய்து, பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் புதிதாக பயணிகள் இருக்கைகள், மின் விசிறிகள் அமைக்கவும், போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து நிலையத்தில் எல்.இ.டி மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE