பல்லடம்: பனியன் கழிவு குடோனில் தீ; 12 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயணைப்பு

By இரா.கார்த்திகேயன்

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பழைய பனியன் கழிவு குடோனி்ல் திடீரென் தீ பற்றி எரிய தொடங்கியதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலையில் பற்றிய தீ 12 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் பிற்பகல் 3 மணியளவில் அணைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமலூரில் கார்த்திக் என்பவர் வாடகைக்கு கட்டிடம் பிடித்து அதில் பழைய பனியன் துணிகள் சேகரிக்கும் கிடங்கு வைத்துள்ளார். இவரது குடோனுக்கு அருகில் இப்ராஹிம் என்பவர் பழைய பஞ்சுக் கழிவுகளை மறுசுழற்சி செய்து நூல் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 3 மணி அளவில் நூல் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ ஜன்னல் வழியாக அருகில் இருந்த குடோனுக்கும் பரவி பற்றி எரியத் தொடங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு துறை வீரர்கள் 5 மணி நேரமாக போராடி தீயை அணைக்க முயற்சித்தனர். இந்த விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பனியன் துணி கழிவுகள் மற்றும் பனியன் ரோல்கள் எரிந்து சேதமாகின. மேலும், குடோனின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளதால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி வருகின்றனர். இதனால் கூடுதல் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டனர்.

பொக்லைன் இயந்திரங்கள் மூலம், எரிந்து சேதமடைந்த பனியன் துணிகளை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த விபத்தில் தப்பிய பனியன் ரோல்களை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்தக் குடோனின் அருகே இயங்கி வந்த நூல் தயாரிக்கும் ஆலையில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததே தீ விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE