உங்கள் குரல்: சிறுநீர் கழிக்கும் இடமான எழும்பூர் கென்னட் லேன்

By செய்திப்பிரிவு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தையும், காந்தி இர்வின் சாலையும், பாந்தியன் சாலையையும் இணைக்கும் கென்னட் லேன், ரயில் நிலைய பயணிகள் பெரிதும் பயன்படுத்தும் சாலையாக இருந்து வருகிறது. முக்கியமாக ரயில் நிலையத்தையொட்டி விடுதிகளில் தங்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கென்னட் லேனில் அமைந்துள்ள விடுதிகளில் தான் பெரும்பாலும் தங்குகின்றனர்.

அதற்கேற்ப பல்வேறு உணவகங்களும், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும், கல்வி நிறுவனம் போன்றவையும் இச்சாலையில் அமைந்துள்ளன. இவ்வாறு தினசரி பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும் கென்னட் லேனின், பாந்தியன் சாலை சந்திப்பானது தற்போது சிறுநீர் கழிக்கும் இடமாக மாறிவருவதாகவும், பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாதவாறு மோசமான நிலையில் இருந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், விரைந்து எழும்பூர் கென்னட் லேன் - பாந்தியன் சாலை சந்திப்பை சுத்தப்படுத்தி சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ சேவையைத் தொடர்பு கொண்டு சேகர் என்ற வாசகர் கூறியதாவது: கென்னட் லேன் சாலையை தினசரி பயன்படுத்தி வருகிறேன். பாந்தியன் சாலையில் உள்ள போலீஸ் மியூசியம் எதிரே அமைந்துள்ள கென்னட் லேன் பகுதியின் சாலை ஓரங்களில் தொடர்ந்து சிறுநீர் கழிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.

அங்குள்ள, மறைந்த நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் தலைவர் எஸ்.ராமச்சந்திர நாடார் சிலையில் இருந்து, தெருவில் அமைந்துள்ள பாண்டியன் உணவகம் வரை சாலை ஓரத்தில் சிறுநீர் கழிக்கப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் கென்னட் லேன் வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மூக்கை பொத்திக்கொண்டு தான்சாலையை தினமும் கடந்து செல்கின்றனர். இதுதவிர சிறுநீர் கழிக்கும் இடங்களிலே குப்பைகளும் குவிக்கப்பட்டு, மதுபாட்டில்கள் போன்றவையும் போடப்படுகின்றன. இதனால் இப்பகுதியே சுகாதாரமின்றி நோய் தொற்று பரவும் நிலையில் இருந்து வருகிறது.

இதைப்பற்றி கவலைப்படாமல் அங்கு ஆட்டோக்களும், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் வேன்களும் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இது ஆபத்தானது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கென்னட் லேன் - பாந்தியன் சாலை சந்திப்பில் யாரும் சிறுநீர் கழிக்காத வகையில் மாற்று ஏற்பாடு செய்யவேண்டும். தேங்கி கிடக்கும் குப்பைகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “கென்னட் லேன் - பாந்தியன் சாலை சந்திப்பு பகுதியில் சிறுநீர் கழிக்காதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டாலும் சில நேரங்களில் அங்கு நிறுத்தப்படும் வாகனங்களால் அவை அகற்றப்பட்டு விடுகின்றன.

இதையொட்டி சாலையோர பகுதிகளை சற்று உயர்த்தி கட்டி பாதசாரிகளுக்கு பயன்படும் வகையில் அமைக்க தீர்மானித்துள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதேபோல அங்குள்ள குப்பைகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE