அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்: இபிஎஸ் அறிவுறுத்தல்

By ச.கார்த்திகேயன்

சென்னை: அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 9 தொகுகளில் 3-ம் இடத்துக்கும் ஒரு தொகுதியில் 4-ம் இடத்துக்கும் சென்றது. இந்நிலையில் மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன்படி இன்று (ஜூலை 12) அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் பேசும்போது, “இந்தத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்காதது, பிரதமர் வேட்பாளரை நாம் முன்னிறுத்தாதது போன்ற காரணங்களால் தோல்வியைச் சந்தித்தோம்” என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது..

பின்னர் பேசிய பொதுச்செயலாளர் பழனிச்சாமி, “நிர்வாகிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளைக் களைய வேண்டும். கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்த்து பொறுப்புகளை வழங்க வேண்டும். அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இது திமுகவுக்கு தற்காலிகமான வெற்றி. பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்றுள்ளனர். 2026 தேர்தல் வெற்றி நமக்குத்தான்; நம்பிக்கையோடு இருங்கள்” என பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE