ரவுடி துரை என்கவுன்ட்டர்: புதுக்கோட்டை மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் சாலை மறியலால் பதற்றம்

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வியாழக்கிழமை (ஜூலை 9) போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி துரை சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்படும் நிலையில் துரையின் உறவினர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரை என்ற துரைசாமி(42). இவர் மீது கொலை வழக்குகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை (ஜூலை 9) புதுக்கோட்டை அருகே வம்பன் யூக்கலிப்டஸ் காட்டுப்பகுதியில் ஆயுதங்களுடன் இளைஞர்கள் நடமாட்டம் இருப்பதாக ஆலங்குடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ரவுடி துரை அங்கு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

போலீஸார் அவரை பிடிக்க முயற்சி செய்தபோது தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் காவல் ஆய்வாளர் முத்தையனை நோக்கி துரை சுட்டுள்ளார். அப்போது, சுதாரித்துக் கொண்ட முத்தையன் விலகவே, அவர் மீது தோட்டா படாமல் சென்றுள்ளது. அதைத் தொடர்ந்து மீண்டும் நாட்டுத்துப் பாக்கியால் துரை சுட முயன்றுள்ளார். தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது.

அதன் பிறகு தங்களைத் தற்காத்துக் கொள்ளும் விதமாக காவல் ஆய்வாளர் முத்தையன் துரையை சுட்டார். அதில், பலத்த காயங்களுடன் அதே இடத்தில் துரை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து திருச்சி டிஐஜி-யான மனோகரன், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் துரையின் உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு இன்று வந்திருந்த துரையின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியல் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து துரையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்கான ஆயத்த பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE