தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா துணை முதல்வர் மறுப்பது அநீதி: அன்புமணி கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணைப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மறுப்பது அநீதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய வசதியாக தமிழ்நாட்டிற்கு காவிரியில் தினமும் ஒரு டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை என்றும், நல்ல மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருக்கும் நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்றும், அதனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர இயலாது என்றும் கர்நாடக துணை முதலமைச்சர் கூறுவது முழுக்க முழுக்க பொய் ஆகும். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் இன்று காலை நிலவரப்படி, 72.50 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு சுமார் 20,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளின் நீர்இருப்பு கடந்த 19 நாட்களில் 35 டி.எம்.சி அதிகரித்துள்ளது. மொத்தம் 114.57 டி.எம்.சி கொள்ளவுள்ள அணைகளில் மூன்றில் இரு பங்கு அளவுக்கு தண்ணீர் இருக்கும் நிலையில், அணைகளில் தண்ணீர் இல்லை என்று கூறுவதை எவரும் நம்ப மாட்டார்கள்.

உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி என இம்மாத இறுதிக்குள்ளாக 44 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும். இன்று வரை 23 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரு டி.எம்.சி தண்ணீரைக் கூட தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்கவில்லை.

காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் ஆணையை காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த சில நாட்களில் உறுதி செய்த பிறகு தான் கர்நாடகம் தண்ணீர் திறப்பதற்கான முறைப்படியான ஆணை பிறப்பிக்கப்படும். அதன்படி பார்த்தால் இம்மாத இறுதி வரை அதிகபட்சமாக 15 டி.எம்.சி தண்ணீர் மட்டும் தான் கிடைக்கும். அது இம்மாத இறுதி வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு தான். அதைக் கூட தமிழகத்திற்கு வழங்க முடியாது என்று கர்நாடகம் மறுப்பது பெரும் அநீதி ஆகும். இதை அனுமதிக்க முடியாது.

கர்நாடக அணைகளில் 72 டி.எம்.சி தண்ணீர் இருந்தால் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மாட்டோம், அணைகள் முழுமையாக நிரம்பினால் தான் தண்ணீர் திறப்போம் என்று கூறுவதன் மூலம் தமிழ்நாட்டை உபரி நீரை வெளியேற்றுவதற்காக வடிகாலாக கர்நாடகம் பயன்படுத்தி வருகிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் அனைத்து அத்துமீறல்களையும், அநீதிகளையும் திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதால் தான் அம்மாநிலத்திற்கு இந்த அளவு துணிச்சலைக் கொடுத்துள்ளது.

காவிரி சிக்கலில் கர்நாடகம் இழைக்கும் அநீதியை தொடர்ந்து தமிழகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அடுத்த சில நாட்களில் கூட்டி, இநத சிக்கலில் அதிகாரப்பூர்வ ஆணை பிறப்பிக்கும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அதன்பிறகும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்தால் காவிரி மேலாண்மை ஆணைய விதி எண் 16-இன்படி கர்நாடக அரசு மீது மத்திய அரசின் வாயிலாக நடவடிக்கை எடுக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்த வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக, காவிரி நடுவர் மன்றம் ஆணையிட்டவாறு, அதன் தீர்ப்பை செயல்படுத்த காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் அனைத்தையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்