இந்திய ராணுவத்துக்கான 7 புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ராணுவப் பயன்பாட்டுக்கான 7 புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள நிதித் திட்டத்தின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நீருக்கடியில் செல்லும் வாகனம், ரேடார் சிக்னல், ரிமோட் சிஸ்டம் உட்பட இந்திய ராணுவத்துக்குத் தேவையான 7 புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை தனியார் நிறுவனங்கள் உருவாக்க உள்ளன.

இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் குறிப்பில், “இந்திய ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களை, தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 7 புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தித் துறை வலுப்படும்” என்று தெரிவித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தி ரூ.1.26 லட்சம் கோடி: இந்தியா அதன் பயன்பாட்டுக்கான ராணுவ தளவாடங்களை பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், ராணுவ தளவாடங்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில், உள்நாட்டிலேயே அதன் தயாரிப்புகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்தது.

2023-24 நிதி ஆண்டில் ராணுவ தளவாட உள்நாட்டு தயாரிப்பு இதுவரையில் இல்லாத அளவில் ரூ.1.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது முந்தைய 2022-23 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.7 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE