யானை பசிக்கு சோளப் பொரியா? - மாடித்தோட்ட ‘கிட்’ எண்ணிக்கையை அதிகரிக்க இல்லத்தரசிகள் கோரிக்கை

By டி.செல்வகுமார் 


சென்னை: தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீட்டில் மாடித் தோட்டம் அமைக்க விரும்பும் நிலையில் யானைப் பசிக்கு சோளப் பொரி என்பதுபோல இந்தாண்டு வெறுமனே 20 ஆயிரம் மாடித் தோட்ட ‘கிட்’-கள் மட்டும் மானிய விலையில் வழங்கப்படவுள்ளது.

ஒரு மனிதன் தினமும் சராசரியாக 300 கிராம் காய்கறிகள் அதாவது 125 கிராம் கீரை வகைகள், 100 கிராம் கிழங்கு வகைகள், 75 கிராம் இதர காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்றுஉலக சுகாதார நிறுவனம் பரிந்துரைசெய்துள்ளது. நகர்ப்புற மக்களுக்குதோட்டம் அமைப்பதற்கான போதியஇடவசதி இல்லாததால் வீட்டு மாடியில் தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மாடித் தோட்டம் அமைக்க தோட்டக்கலைத் துறை இணையதளத்தில் (https://tnhorticulture.tn.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.அதையடுத்து முன்னுரிமை அடிப்படையில் மாடித்தோட்டத்துக்கான ‘ ‘கிட்’’டை வீட்டின் அருகில் உள்ள உதவி தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த ‘கிட்’டில் 6 பாலிதீன் கவர், 2 கிலோ தென்னை நார் கழிவு கட்டிகள், நுண்ணுயிர் உரங்கள் (அசோஸ்பைரில்லம்), 6 வகையான காய்கறி விதைகள் (தக்காளி, கத்தரி, வெண்டை, கீரை, கொத்தவரங்காய், அவரைக்காய்) உள்ளிட்டவை இருக்கும்.

மாடித் தோட்டம் அமைப்பதற்காக வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதி குறைந்து கொண்டே போவதால், மாடித் தோட்டம் அமைக்க மானிய விலையில் வழங்கப்படும் ‘கிட்’ எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது. கடந்த 2021-2022-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மாடித்தோட்ட ‘கிட்’மானிய விலையில் வழங்கப்பட்டது. பின்னர் இந்த எண்ணிக்கை 70 ஆயிரம், 50 ஆயிரம், 25 ஆயிரம் என படிப்படியாகக் குறைந்தது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி மாவட்டங்கள் தவிர மீதமுள்ள36 மாவட்டங்களில் மாடித்தோட்டத்துக்கான ‘கிட்’ மானிய விலையில்வழங்கப்படுகிறது. மாடித் தோட்டம் அமைக்க மாநிலம் முழுவதுக்கும் 20 ஆயிரம் ‘கிட்’ மட்டும் மானிய விலையில் வழங்கப்படவுள்ளது. ஒரு ‘கிட்’ விலை ரூ.450. இதற்காகசுமார் ரூ.90 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 3,500 மாடித்தோட்ட ‘கிட்’ வழங்கப்படும். கோவை 1,200, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருச்சி மாவட்டங்களுக்கு தலாஆயிரம் ‘கிட்’, திண்டுக்கல் மாவட்டத்துக்கு 800 ‘கிட்’, இதர மாவட்டங்களுக்கு சில நூறு ‘கிட்’-கள் என ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

வீட்டு மாடியில் காய்கறிகளை வளர்த்து பயன்பெறுவது குறித்து மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ‘கிட்’ வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் மாடித் தோட்டம் அமைக்க ஆர்வமாக இருக்கும் நிலையில் மானிய விலையிலான மாடித்தோட்ட ‘கிட்’-களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க அரசுஆவன செய்ய வேண்டும் என்பதுஇல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE