ஊரகப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் விரிவாக்கம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

தருமபுரி: ஊரகப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஊரகப் பகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசின் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாளையம்புதூரில் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் முடிவுற்ற ரூ.444.77 கோடி மதிப்பிலான திட்டங்களை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். 2,637 பேருக்கு ரூ.56.04 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்காக, தற்போது இயங்கி வரும் பேருந்துகளுக்கு பதிலாக 20 புதிய நகர பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களின் கோரிக்கைகள் எதுவும் அரசின் பார்வையில் இருந்து தவறிவிட கூடாது என்ற நோக்கத்திலேயே, மக்களிடம் இருந்து பல்வேறு திட்டங்களின்கீழ் பெறப்படும் அனைத்து மனுக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் ‘முதல்வரின் முகவரி’ என்ற துறையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். இதன்மூலம், மக்களின் அனைத்து கோரிக்கை மனுக்களும் தலைமைச் செயலகத்துக்கு வந்துவிடுகின்றன.

நான் முதல்வரானது முதல் இதுவரை இத்துறையின்கீழ் 68 லட்சத்து 30,281 மனுக்கள் பெறப்பட்டுள் ளன. அதில் 66 லட்சத்து 25,304 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 72,438 மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத் துமே அரசுத் துறை அலுவலர்களை நாடி பொதுமக்கள்அளித்த மனுக்கள் மற்றும் கோரிக்கைகள்.

அந்த நிலையை மாற்றி, பொதுமக்கள் அதிகம் அணுகும் 15 அரசு துறைகளின் 44 சேவைகள் தொடர்பாக, மக்களின் ஊர்களுக்கே சென்று அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து 30 நாட்களுக்குள் தீர்வுகாணும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம். முதல்கட்டமாக நகரப் பகுதிகளில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் அரசின் திட்டங்கள் மூலம் ஏதாவது ஒரு வகையில் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறோம். இதை விரும்பாத எதிர்க்கட்சிகள் பொறாமையால் பொய் பிரச்சாரங்கள் செய்து, ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கின்றன. அனைத்து மக்களுக்குமான அரசாக இது செயல்படுகிறது. இந்த பெருந்தன்மையை மற்றவர்களிடம் பார்க்க முடியவில்லை.

தமிழகத்தில் தொடர் தோல்விக்கு பிறகும் மத்திய பாஜக அரசு பாடம் கற்கவில்லை. தமிழகத்தின் முக்கிய கோரிக்கையான மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்க அந்த அரசுக்கு மனமில்லை. மத்திய அரசு என்பது விருப்பு, வெறுப்புகளைக் கடந்து அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்பட வேண்டும்.

மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருப்பதுதான் எங்கள் வெற்றியின் ரகசியம், தமிழக வளர்ச்சியின் ரகசியம். இந்தியாவின் முதன்மை மாநிலமாக உள்ள தமிழகத்தை உன்னதமான மாநிலமாக உருவாக்கிக் காட்டுவோம்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே. பன்னீர்செல்வம், தருமபுரி எம்.பி. மணி, எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அலுவலர் மோகன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE