நாதக பிரமுகர் சாட்டை துருமுருகன் கைது - நீதிமன்ற காவலை நிராகரித்து நீதிபதி உத்தரவு

By செய்திப்பிரிவு

திருச்சி / தென்காசி / சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது,நாதக வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து, அக்கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும், பட்டியலின மக்கள் குறித்தும் சாட்டைமுருகன் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக, திருச்சிமாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண் புகார் அளித்திருந்தார். இதன் பேரில், சாட்டை துரைமுருகன் மீது திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரைத் தேடி வந்தனர்.

இதற்கிடையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் விடுதியில் சாட்டை துரைமுருகன் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருச்சி போலீஸார் அங்கு சென்று, சாட்டை துரைமுருகனை நேற்று கைது செய்தனர்.

பின்னர் அவரை திருச்சி அழைத்து வந்து, மாவட்ட கூடுதல்நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். "இது புனையப்பட்ட வழக்கு, பல ஆண்டுகளாக அதிமுகவினர் பாடும் பாடலைமேற்கோள்காட்டி அவர் பேசியுள்ளார்" என்று சாட்டை துரைமுருகன் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து, நீதிமன்றக் காவல் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்தார். பின்னர், சாட்டை துரைமுருகன் தனது கட்சியினருடன், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பழனிசாமி, சீமான் கண்டனம்: அதிமுக பொதுச் செயலாளர்பழனிசாமி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பழனிசாமி: திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோர் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால், ஆட்சியாளர் தவறுகளை சுட்டிக்காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை மேற்கொள்வது தொடர்கதையாகி விட்டது. நாதக நிர்வாகி சாட்டைதுரைமுருகனை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

சீமான்: கொலையாளிகள், கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் மீதுநடவடிக்கை எடுக்காமல், மேடையில் பேசிய சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். என்னை சுற்றியிருப்பவர்களை கைது செய்து, எனக்கு நெருக்கடி தர நினைக்கின்றனர்.

அண்ணாமலை: கூலிப்படையினர், ரவுடிகளிடம்தான் போலீஸார் வீரத்தைக் காட்ட வேண்டுமே தவிர, கருத்து தெரிவிக்கும் சாட்டைமுருகன் போன்றோரை கைது செய்வது சரியல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE