மக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை வழங்க சென்னை மண்டல அலுவலகத்தில்`மே ஐ ஹெல்ப் யூ' வசதி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அண்ணாசாலையில் காயிதே மில்லத் கல்லூரி அருகே மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், பாஸ்போர்ட் சேவைகளை வழங்க மக்களுக்கு உதவும்விதமாக, `மே ஐ ஹெல்ப் யூ' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில், பாஸ்போர்ட் சேவைகள்குறித்த வழிகாட்டுதல்களை பெறுவதுடன், பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிரப்புவது, பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், அலுவலத்துக்கு நேரில் வர வேண்டிய நேரம் ஆகியவை தொடர்பான சந்தேகங்களுக்கு பொதுமக்கள் விளக்கம் பெறலாம்.

044–28513639 / 28513640 ஆகியதொலைபேசி எண்களிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். தங்களது கேள்விகளை வாட்ஸ்-அப் செயலியில் 917305330666 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். மக்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சேவைகள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கிடைக்கும்.

இதுகுறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் கூறியுள்ளதாவது: பாஸ்போர்ட் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால், அவற்றை விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே நிரப்பலாம். பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ஒரே அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.passportindia.gov.in ஆகும். மேலும் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் பிஎஸ்பி பிரிவின் ‘mPassport Seva’ என்ற அதிகாரப்பூர்வ செல்போன் செயலி மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பத்தாரர்கள் தங்களது தனிப்பட்ட சொந்த ஆவணங்களையோ அல்லது ரகசியமான தகவல்களையோ இடைத்தரகர்கள், முகவர்களிடம் தெரிவிக்க வேண்டாம்.

இந்த `மே ஐ ஹெல்ப் யூ' முன்முயற்சி மூலம் மக்கள் தங்களது அடிப்படை கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி பதில் பெறலாம். மேலும், முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் பொறியில் சிக்காமல் தடுக்க இது உதவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE