வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி: அமைச்சர் உதயநிதி வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: வெளிநாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள தமிழக விளையாட்டு வீராங்கனைகளுக்கு ரூ.8 லட்சத்துக்கான காசோலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வரும் நவ.10 முதல்17-ம் தேதி வரை உலக கேரம் போட்டி நடைபெற உள்ளது, இந்த போட்டியில் தமிழகத்தின் சார்பில் கே.நாகஜோதி, எம்.காசிமா, வி.மித்ரா ஆகிய 3 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் பயிற்றுநர் மரியா இருதயம் செல்கிறார்.

தலா ரூ.1.50 லட்சம்: இவர்களுக்கான செலவின தொகையாக தலா ரூ.1.50லட்சத்துக்கான காசோலையை, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

வாள்வீச்சு சாம்பியன்ஷிப்: அதேபோல், நியூசிலாந்தில் ஜூலை 16 முதல் 19-ம் தேதிவரை நடைபெற உள்ள ஜூனியர் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் ஜாய்ஸ் அஷிதா பங்கேற்கஉள்ளார்.

அவருக்கு தேவைப்படும் செலவின தொகை ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும் அமைச்சர் உதயநிதி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில், விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE