குந்தலாடி மனநல காப்பக உரிமையாளர் உட்பட 10 பேரிடம் விசாரணை

By ஆர்.டி.சிவசங்கர்


பந்தலூர்: பந்தலூர் அருகே குந்தலாடி பகுதியில் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக மனநலம் காப்பகம் நடத்தி வந்த உரிமையாளர் அகஸ்டின், அவரது மனைவி கிரேசி மற்றும் ஊழியர்களிடம் நெலாக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து 5 மணி நேரத்துக்கும் மேலாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக மருத்துவர் அகஸ்டின் என்பவர் மனநல காப்பகம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, தேவாலா டிஎஸ்பி சரவணன் தலைமையிலான குழுவினர் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது முறையான அனுமதி இல்லாமலும், சுகாதாரமற்ற முறையில், எந்தவித மருத்துவ வசதி இல்லாமல் மனநல காப்பகம் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து காப்பகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள், காப்பகத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 பேரை கோவையில் உள்ள காப்பகத்துக்கு அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி மனநலம் காப்பகத்தின் உரிமையாளரான தலைமறைவாக இருந்த அகஸ்டின், அவரது மனைவி கிரேசி மற்றும் ஊழியர்கள் என 10 பேருக்கு போலீஸார் சம்மன் வழங்கினர்.

இதையடுத்து 10 பேரும் இன்று நெலாக்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜராகினர்.தேவாலா டிஎஸ்பி சரவணன் தலைமையில், சுமார் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக அவர்களிடம், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், காப்பகத்தில் இறந்து போனவர்கள் எப்படி இறந்தார்கள்?, இறப்புக்கான காரணம் என்ன? , காப்பகத்தை நடத்துவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.அதேபோல் காப்பகத்தில் மாதத்துக்கு ஒரு முறை சிகிச்சை வழங்கிய செவிலியர்களிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE