ஜூலை இறுதியில் புதுச்சேரி பட்ஜெட்: அதிருப்தி பாஜக எம்எல்ஏ-க்கள் ஆலோசனை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஜூலை இறுதியில் புதுச்சேரி பட்ஜெட் தாக்கலாகவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அதிருப்தி பாஜக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று ஆலோசனை நடத்தினர்.

புதுவை முதல்வர் ரங்கசாமி, பாஜக அமைச்சர்களுக்கு எதிராக பாஜக எம்எல்ஏ-க்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். முதல்வர் ரங்கசாமி அரசுக்கு அளிக்கும் ஆதரவை பாஜக வாபஸ் பெற வேண்டும் என்றும், பாஜக அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்றும், பாஜக எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-க்கள் அஙகாளன், சிவசங்கர், சீனிவாச அசோக் மற்றும் நியமன எம்எல்ஏ-வான வெங்கடேசன் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கடந்த வாரத்தில் டெல்லி சென்று தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து புதுச்சேரி முதல்வர் மீது புகார் தெரிவித்தனர். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைவும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரிடம் நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையின் 3-வது மாடியில் உள்ள ஜான்குமார் எம்எல்ஏ அறையில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, அங்காளன், சிவசங்கர், வெங்கடேசன் ஆகியோர் இன்று ஒன்று கூடி சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து கல்யாணசுந்தரம் எம்எல்ஏவிடம் கேட்டபோது, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். புதுவை சட்டசபையில் இந்த மாத இறுதியில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. கூட்டத் தொடருக்கு முன்பாக எம்எல்ஏ-க்களை சமரசம் செய்யாவிட்டால் அதிருப்தி எதிரொலிக்கும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தரப்பில் கூறுகையில், "எதிர்க்கட்சிகள், சுயேட்சைகளுக்கு தொகுதி நலத்திட்டங்களை செயல்படுத்துவது போல் பாஜக எம்எல்ஏ-க்களின் தொகுதிகளுக்கும் ரங்கசாமி செயல்படுத்த வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவே அமைச்சர், வாரியத்தலைவர் பதவிகளைக் கேட்கிறோம். கட்சித் தலைமை தான் இதில் முடிவு எடுக்கவேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE