விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும்: ஆட்சியர் தகவல்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (ஜூலை 13) நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்,” என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித் சிங் பன்சால் ஆகியோர் மேற்பார்வையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் முன்னிலையில் இன்று அந்த அறைக்கு சீல்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் பழனி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இடைத்தேர்தல் 276 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று (ஜூலை 10) வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அதனடிப்படையில் இன்று 276 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீலிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (ஜூலை 13) நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மேலும், அஞ்சல் வாக்குகள் எண்ணுவதற்காக 2 மேசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அஞ்சல் வாக்கு எண்ணிக்கை 1 சுற்றாக நடைபெறும். வாக்கு எண்ணும் மையத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 3 பிரிவாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சுழற்சி முறையில் 1 காவல் துணை கண்காணிப்பாளர், 1 காவல் ஆய்வாளர், 8 உதவி ஆய்வாளர் கள், 18 காவலர்கள், 14 சிறப்பு காவல் படையினர்கள், 8 மத்திய காவல் பாதுகாப்பு படையினர் என நாளொன்றுக்கு 150 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.வாக்கு எண்ணிக்கை மையத்தின் முக்கியப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு அறை மற்றும் மையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்பாளர்கள் மற்றும் முகவர்களும் கண்காணிப்பதற்கான தனியாக ஒரு கண்காணிப்பு மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாட்ச், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழரசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகேசன், துணை ஆட்சியர் முகுந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான விக்கிரவாண்டி வட்டாட்சியர் யுவராஜ், தனி வட்டாட்சியர் கணேசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE