இருளில் மூழ்கிய மேட்டூர் மலைப்பாதை: எல்இடி விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் மலைப்பாதை சாலையில் எல்இடி விளக்குகள் பொருத்தியும், அவை எரியாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாலம் வழியாக சேலம் கேம்ப் வருவதற்கு மலைப்பாதை வழியாக வர வேண்டும்.

காவிரி பாலம் மிகவும் சிறியது என்பதால், மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள், பேருந்துகள் செல்வதற்கு அனுமதி இல்லை. இந்த வழியாக இருசக்கர, கார் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்கின்றன. இந்த சாலை வழியாக உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களும் பயணிக்கின்றன. இந்த சாலையில் எல்இடி விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நடந்தது. அதன்படி, காவிரி பாலம் தொடங்கி, சேலம் கேம்ப் வரை 40-க்கும் மேற்பட்ட விளக்குகள் மேட்டூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொருத்தப்பட்டன.

இந்நிலையில், அவற்றைப் பொருத்தி ஒரு மாதத்துக்கு மேலாகியும் எரியாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மலைப்பாதை இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: மலைப்பாதை வழியாக தினமும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளக்குகள் பொருத்தியும் எதுவும் எரியாததால், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் செல்ல தயங்குகின்றனர்.

மேலும், ஒரு சில இடங்களில் வளைவுகள் இருப்பதால், இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதுகுறித்து அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை, என்றனர். இதுகுறித்து வார்டு கவுன்சிலர் லாவண்யா கூறியதாவது: எல்இடி விளக்குகள் எரியாதது குறித்து நகராட்சி, மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சரி செய்து தருமாறு கேட்டு கொண்டே தான் இருக்கிறோம், என்றார்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மலைப்பாதையில் மின் ஒயர்கள் உரசிக் கொண்டு இருப்பதால் எல்இடி விளக்குகளுக்கு மின் இணைப்பு வழங்க முடியவில்லை. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனை சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE