டப்பா டான்ஸ் ஆடும் டவுன் பஸ்கள் - அச்சத்துடன் பயணிக்கும் தஞ்சை மக்கள்!

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு நகரப் பேருந்துகள் பழுதடைந்த நிலையிலும், பராமரிப்பின்றியும் இயக்கப்படுவதால், அதில் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டங்களில் முதன்மையானது கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டம். இந்தக் கோட்டத்தில் கும்பகோணம், நாகை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய மண்டலங்கள் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், கும்பகோணம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய கிளைகள் மூலம் 150 நகரப் பேருந்துகள், 250 புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில், தஞ்சாவூரில் மட்டுமே நகர பேருந்துகளுக்கும், புறநகர் பேருந்துகளுக்கும் தனித்தனியாக பணிமனைகள் உள்ளன. தஞ்சாவூரில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு நகரப் பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பேருந்துகளில் இருக்கைகள் உடைந்தும், தகரங்கள் பெயர்ந்தும் காணப்படுகின்றன. படிக்கட்டுகள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளன. மேலும், உரிய பராமரிப்பு இல்லாததால் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நின்று விடுகின்றன. இதனால் பேருந்துகளில் பயணம் செய்யவே மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசத்துக்கும், அம்மாபேட்டையிலிருந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்துக்கும் சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் நடுவழியில் அச்சு முறிந்து நின்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பேருந்துகளில் உள்ள கண்ணாடிகள் உடைந்தும், பிரேக், ஹாரன், விளக்கு உள்ளிட்டவை போதிய பராமரிப்பு இல்லாததாலும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக பணிமனை தொழிலாளர்கள் கூறியது: பேருந்துகளை கழுவி சுத்தம் செய்ய வாங்கப்பட்ட இயந்திரங்கள் பழுதாகி, கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளன. பேருந்துகளை சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட தினக்கூலி பணியாளர்களும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணிக்கு வருவதில்லை. இதனால், பேருந்துகள் அழுக்கு படிந்த நிலையில் இயக்கப்படுகின்றன. அதேபோல, போதிய தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாததாலும், உதிரிபாகங்கள் கொள்முதல் செய்து தராததாலும், இருக்கும் பொருட்களில் வெல்டு வைத்து சமாளித்து பேருந்துகளை தொழிலாளர்கள் இயக்கி வருகின்றனர்.

பக்கவாட்டு கண்ணாடிகள், முகப்பு விளக்குகளை ஓட்டுநர்களே சொந்த செலவில் வாங்கி நகர பேருந்துகளில் பொருத்தி இயக்கி வருகின்றனர். இதுபோன்ற உதிரி பாகங்கள் எல்லாம் கொள்முதல் செய்வதையே போக்குவரத்துக் கழகம் குறைத்துவிட்டது. இதனால் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, முழுமையாக செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லுமா அல்லது நடுவழியிலேயே நிற்குமா என்ற ஐயத்துடனேயே பயணிகள் அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர் என்றனர்.

இதுகுறித்து ஏஐடியுசி சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன் கூறியது: நகர பேருந்துகள் 12 ஆண்டுகள் வரை இயக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில், இங்கு இயக்கப்படும் நகர பேருந்துகள் எல்லாம் 15 ஆண்டுகளை கடந்து இயக்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக புதிய தொழில்நுட்ப பணியாளர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை.

ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணி ஓய்வுக்கு பின்னர் இருக்கும் தொழிலாளர்களே கூடுதல் பணிச்சுமையுடன் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப கருவிகளையும் வாங்கி கொடுப்பதில்லை. அவர்கள் வேறு வழியின்றி தற்போது சொந்த செலவில் டூல்ஸ் வாங்கி, அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை நீக்கி வருகின்றனர்.

தரமான உதிரி பாகங்களை போக்குவரத்துக் கழகம் கொள்முதல் செய்து தர வேண்டும். கரோனாவுக்கு பின்னர் 75 சதவீதம் பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. இவற்றை முழுமையாக இயக்க, போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காலிப்பணியிடங்கள் நியமனம், நிதி ஒதுக்கீடு, உதிரிபாகங்கள் கொள்முதல் எல்லாம் மாநில அளவில் நிர்வாகமே செய்வதால், அவர்களின் அறிவுரையின்படி தான் செயல்படுகிறோம். பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்