சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் மரியாதை

By டி.செல்வகுமார் 


சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 267-வது பிறந்தநாள் விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது உருவசிலை மலர் மலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே அவர் உருவப் படத்திற்கும் மலர் மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வீரன் அழகுமுத்துக்கோனுக்கு மரியாதை செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை 8:50 மணியளவில் எழும்பூர் வந்தார். அழகுமுத்துக்கோன் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ராஜகண்ப்பன், பெரிய கருப்பன் ஆகியோர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை அடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி, அழகு முத்துக்கோன் உருவப்படத்திற்கு மலர் தூவியும், பின்னர் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, கோகுலஇந்திரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அவர்களை தொடர்ந்து மற்ற கட்சி தலைவர்களும் மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE