அமைதியாக நடந்தது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: 82.48 சதவீத வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதிநடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த ஜூன் 10-ம் தேதி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

ஜூன் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 24-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இறுதி வேட்பாளர் பட்டியல் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 64 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 29 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அதிமுக அறிவித்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பரபரப்பாக நடந்த பிரச்சாரம் கடந்த 8-ம் தேதி மாலையுடன் ஓய்ந்தது.

இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் முதல் மூத்தகுடிமக்கள் வரை அனைவரும் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

பதற்றமான மையங்கள்: மிக பதற்றமான மையங்களாக கண்டறியப்பட்ட ராதாபுரம், குண்டலப்புலியூர், பனையபுரம் கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்குஅசம்பாவிதம் ஏதுமின்றி அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக, ஒட்டன்காடுவெட்டி, காணை ஆகிய வாக்குச்சாவடிகளில் ஒரு மணி நேரமும், கருங்காலிப்பட்டு, கல்பட்டு, மாம்பழப்பட்டு, பொன்னங்குப்பம் வாக்குச்சாவடிகளில் அரை மணி நேரமும் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, அன்னியூர் அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி, பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

சலசலப்பு சம்பவங்கள்: விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை மாதிரி வாக்குச்சாவடி அருகே வாக்குக்கு பணம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்ததால், இருதரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் கடைகள் திறக்க அனுமதி இல்லாத நிலையில், காணையில் பால் கடை திறக்கப்பட்டிருந்தது. அதை மூடுமாறு போலீஸார் கூறியதால், வாக்குவாதம் ஏற்பட்டது. 2 பேரை போலீஸார் தாக்கியதால், அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாமக வேட்பாளரின் சொந்த ஊரான பனையபுரம் வாக்குச்சாவடி அருகே ஆதரவு திரட்டுவதுபோல திமுகவினர் அமர்ந்திருந்தனர். இதற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், தகராறு ஏற்பட்டது. திமுகவினர் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் உடைக்கப்பட்டன.

விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர் பிரபாகரனை குளவி தாக்கியது. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. குளவிக்கூட்டை தீயணைப்பு வீரர்கள் அகற்றியதும், வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.

மாலை 6 மணிக்கு பிறகும்.. கப்பியாம்புலியூர், வாக்கூர்,உலகலாம்பூண்டி, ஒட்டன்காடுவெட்டி ஆகிய 4 வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு வரிசையில் நின்றிருந்த மொத்தம் 308பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணிக்கு பிறகு வந்தவர்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 276 வாக்குச்சாவடிகளில் இருந்தும் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசுமேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணிக்கை வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில், 99 ஆயிரத்து 944 பெண் வாக்காளர்கள் உட்பட 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

நாடு முழுவதும் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல்: புதுடெல்லி: தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் மொத்தம் 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

விக்கிரவாண்டியில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மற்ற மாநிலங்களில் நேற்று இடைத்தேர்தல் நடந்த தொகுதிகள் மற்றும் மாலை5 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம்:

மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச் (67.12%), ரணகாட் தக்சின் (65.37%), பாக்தா (65.15%), மணிக்தலா (51.39%) ஆகிய 4 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதேபோல, பிஹாரின் ரூபாலி (51.14%), பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு (51.3%), இமாச்சல பிரதேசத்தில் டேஹ்ரா (63.89%), ஹமிர்பூர் (65.78%), நலகார் (75.22%), உத்தராகண்டின் பத்ரிநாத் (47.68%), மங்களார் (67.28%), மத்திய பிரதேசத்தில் அமர்வாரா (72.89%) ஆகிய தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்