ஓராண்டாக சிறையில் உள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மனு மீது நாளை விசாரணை: உச்சநீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஓராண்டாக சிறையில் இருந்து வரும் நிலையில் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஜாமீன் கோரும் மனுவை தள்ளிவைக்க அமலாக்கத் துறை கோரும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் காட்டமாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 14 அன்று கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டுமென அமலாக்கத் துறை தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், கடந்த ஓராண்டுக்கும் மேலாக செந்தில் பாலாஜி ஜாமீ்ன் கிடைக்காமல் சிறையில் உள்ளார். இந்த வழக்கை அமலாக்கத் துறை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டுமென கோரப் போகிறார்கள் என்பதையும் பார்க்கத்தான் போகிறோம் என காட்டமாக தெரிவித்தனர்.

அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை நாளைக்கு (ஜூலை 12) தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE