உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம்

By செய்திப்பிரிவு

கடலூர்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில்ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (ஜூலை 11) தேர்த் திருவிழாவும், நாளை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவமும் நடைபெறுகிறது.

இந்த இரண்டு நாள் உற்சவத்துக்கு மூலவரான நடராஜப் பெருமானும், சிவகாமசுந்தரி அம்பாளும் சித்சபையிலிருந்து வெளியேவருவதால் பூஜை முன்னேற்பாடுகள் கருதி, கனகசபை மீதுபக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய ஜூலை 10,11,12,13-ம் தேதிகளில் அனுமதி இல்லை என்று கோயில்பொதுதீட்சிதர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஆனித் திருமஞ்சன உற்சவத்தின்போது கனகசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்குப் பின்னர், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதனால் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதில் விதிமீறல்கள் இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, திருச்சோபுரநாதர் கோயில் செயல் அலுவலர் மகேஸ்வரன், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மாலா ஆகியோர் மேற்பார்வையில் சிதம்பரம் நகர போலீஸார் பாதுகாப்புடன், கோயில் பொது தீட்சிதர்களின் ஒத்துழைப்புடன் நேற்று காலை 8.30 மணிமுதல் கனகசபையின் மீது ஏறிபக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE