கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் தலைமையில் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

By என்.சன்னாசி

மதுரை: தென் தமிழகத்தில் நுழைவுப்பகுதியான திருமங்கலம் கப்பலூர் பகுதியில் டோல்கேட் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை அப்புறப்படுத்தக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

நான்கு வழிச் சாலைகளைப் பொறுத்த வரையிலும் ரயில்வே பாலம் உட்பட 6 பாலங்களை உள்ளடக்கிய சுமார் 60 கி.மீ. தொலைவுக்குள் ஒரு டோல்கேட் மட்டுமே இருக்கவேண்டும் என்பது தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் விதிமுறை. இந்த விதிமுறையை மீறி திருமங்கலம் அருகே அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் டோல்கேட்டை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி பொது மக்கள், வாகன ஓட்டிகளிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி உள்ளூர் மக்கள், வாகன ஒட்டிகள், அரசியல் கட்சியினர் என, பல்வேறு தரப்பினரும் பல ஆண்டாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், தற்போது வரை விடிவு காலம் பிறக்கவில்லை. இதனால் இந்த டோல்கேட்டில் வாகன ஒட்டிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் அடிக்கடி தகராறு நடப்பதும், போலீஸார் வழக்கு பதிவு செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.

அடிக்கடி இந்தப் பகுதியில் போராட்டம் நடப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் கடும் சிரம்மத்துக்கு உள்ளாகின்றன. திமுக ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் டோல்கேட் நிரந்தரமாக அகற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும், அதற்கான நடவடிக்கையை திமுக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. அதிமுக ஆட்சியில் ஆர்.பி. உதயகுமார் அமைச்சராக இருந்தபோது, உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி முதல் திருமங்கலம் பகுதி உள்ளூர் வாகன உரிமையாளர்கள் தினசரி டோல் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு ரூ. 2 லட்சம் முதல் 12 லட்சம் வரை முந்தைய காலங்களில் டோல்கேட்டை பயன்படுத்தியமைக்காக செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதைக் கண்டித்தும், கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தியும் திருமங்கலத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். அப்போது அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருமங்கலம் பகுதி மக்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என, டோல்கேட் நிர்வாகத்திடம் அவர் அறிவுறுத்தியும் தொடர்ந்து பணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், கப்பலூர் டோல்கேட்டை நிரந்தரமாக அகற்றவேண்டும் எனக் கோரி பல் வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அவரது தலைமையில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள், உள்ளூர் வாகன ஓட்டிகள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் மறியல் போராட்டம் இன்று (ஜூலை 10) நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் இன்று காலை டோல்கேட் பகுதியில் வாகன ஓட்டிகள், பெண்கள் உள்ளிட்டோர் திரண்டனர். அவர்கள் காலை 9 மணிக்கு மறியல் போராட்டத்தைத் தொடங்கினர். அப்போது, டோல்கேட்டை அகற்ற வேண்டும் எனக்கோரி கோஷங்களை எழுப்பினர். அப்போது டோல்கேட்டைக் கடக்க டூவீலர்கள் தவிர எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.

இதனால், மதுரையில் இருந்து திருமங்கலம், ராஜபாளையம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகனங்கள் அருப்புக்கோட்டை மற்றும் சில கிராமப்புற சாலைகளிலும், தென்காசி, ராஜபாளையம் பகுதியில் இருந்து மதுரைக்கு வந்த பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் உசிலம்பட்டி பகுதி வழியாகவும் திருப்பிவிடப்பட்டன.திருமங்கலம் பகுதியில் இருந்து மதுரைக்குச் செல்லும் சில உள்ளூர் வாகனங்களையும் டோல்கேட் அருகிலுள்ள கிராமச் சாலைகளில் மாற்றிவிட்டனர்.

டோல்கேட் பகுதிக்கு எந்த வாகனமும் போகாமல் தடுத்து நிறுத்தியதால் வெறிச் சோடியது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் போராட்டக்காரர்களிடம் மதுரை திருமங்கலம் ஆர்டிஓ-வான சாந்தி, நகாய் பிரிவு அதிகாரிகள், டிஎஸ்பி-யான அருண் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் டோல்கேட் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை மறியல் நீடிக்கும் என அறிவித்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் திருமங்கலம் - மதுரைக்கான போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE