விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 64.44% வாக்குகள் பதிவு

By செய்திப்பிரிவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நேர நிலவரப்படி 64.44% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணிநிலவரப்படி 13 சதவீதமாகவும், 11 மணிநேர நிலவரப்படி 30 சதவீதமாகவும், மதியம் ஒரு மணி நிலவரப்படி 50.95 சதவீதமாகவும் இருந்தது.

காலை முதலே வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்தனர். குறிப்பாக வயது முதிர்ந்தோர் சக்கர நாற்காலியில் வந்து தங்கள் வாக்கினை செலுத்தியதை பல வாக்குச் சாவடிகளில் காண முடிந்தது. 276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 42 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

காலை 7.10 மணிக்கு அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 42-வது வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது மனைவி வனிதா, தந்தை அரிபுத்திரியுடன் வந்து வாக்களித்தார். பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி காலை 9.10 மணிக்கு வாக்களித்தார். மிகவும் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களாக அடையாளம் காணப்பட்ட ராதாபுரம், குண்டலப்புலியூர், பனையபுரம் கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதற்கிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் ஒட்டன் காடுவெட்டி, காணை வாக்குச்சாவடிகளில் 1 மணி நேரமும், கருங்காலிப்பட்டு, கல்பட்டு, மாம்பழப்பட்டு, பொன்னங்குப்பம் ஆகிய வாக்குச்சாவடியில் 30 நிமிடங்களும் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள வயர் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் நிலவியது. சிறிது நேர தாமதத்துக்கு பின் பழுதுகள் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. விக்கிரவாண்டி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் குளவிக்கூட்டால் வாக்குபதிவின் போது இடையூறு ஏற்பட்டது. எனினும், பல இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்தது.

பாமக வேட்பாளர் குற்றச்சாட்டு: வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வேட்பாளர் சி.அன்புமணி, “இத்தொகுதியில் உள்ள எங்களுக்குள் கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், வெளியூர்களில் இருந்து இங்கு வந்து திமுக நிர்வாகிகள் வீட்டில் தங்கியுள்ள திமுகவினரால் இங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட விராட்டிகுப்பம் கே.வி.ஆர் நகரில் திமுகவினர் வாக்காளர்களுக்கு தலா ரூ.6000 அளித்துள்ளனர். இதேபோல தொகுதி முழுவதும் ரொக்கப் பணம், பரிசுப் பொருட்களைக் கொடுத்துள்ளனர். வி.சாத்தனூரில் பரிசுப் பொருட்களையும், ஆசாரங்குப்பத்தில் வேட்டி சேலையும் கொடுத்தபோது அதை பாஜகவினரும் பாமகவினரும் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனாலும் தேர்தல் ஆணையம் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் பாமக அமோக வெற்றி பெறும்” என்றார். அதேநேரம், செய்தியாளர்களிடம் பேசிய அன்னியூர் சிவா, “தமிழக முதல்வரின் மக்கள் நலத் திட்டங்களால் இத்தொகுதியில் திமுக மிகப் பெரிய வெற்றி பெறும்” என்றார்.

முன்னதாக, விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14-ம் தேதி துவங்கியது. 24-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 64 மனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தகுதியான மனுக்களில் யாரும் வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்களுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 26-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்