4 ஆண்டுகளாக ஊரைச் சுற்றிவந்த ‘ஊசிக் கொம்பன்’ யானை குட்டையில் விழுந்து உயிரிழப்பு

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை அருகே குட்டையில் விழுந்து ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள தாசம்பாளையம் பகுதியில் புதர் காட்டின் அருகே குட்டையொன்று உள்ளது. அண்மையில் பெய்த மழை காரணமாக இக்குட்டை சேறும் சகதியுடன் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 10) அதிகாலை இக்குட்டையில் யானையொன்று இறந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள், அது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, இறந்து கிடப்பது மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல ஆண்டுகளாக சுற்றித்திரிந்த ஊசி கொம்பன் என்றழைக்கப்படும் ஆண் யானை என தெரியவந்தது. அந்த யானைக்கு முப்பது வயதிருக்கலாம் என தெரிவித்த வனத்துறையினர், “இந்த யானை சேற்றில் சிக்கி உயிரிழந்ததா அல்லது உடல் நலக்குறைவால் இறந்ததா என உடற்கூராய்வுக்குப் பின்னரே தெரிய வரும்” என்றனர்.

யானையின் உடலை குட்டையில் இருந்து தூக்கி வெளியே எடுக்க பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. உயிரிழந்த யானை தாசம்பாளையம், ஓடந்துறை, கல்லார், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றி வந்தது. இதன் தந்தங்கள் ஊசி போல் கூர்மையுடன் இருந்ததால், இதை ஊசிக் கொம்பன் என வனத்துறையினர் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE