விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி (60), கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதேபோல, நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை, தனது சொந்த கிராமமான பனையபுரத்தில், வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அன்புமணி அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பாமகவினரிடம் கேட்டபோது, “லேசாக சோர்வாக இருந்ததாலும், சரியாக சாப்பிடாததாலும் அவருக்கு வாய்வு தொல்லை ஏற்பட்டுள்ளது. எனினும், ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தேர்தலுக்குப் பின்னர் அவர் உரிய சிகிச்சை மேற்கொள்வார். அதேநேரத்தில், நாளை (இன்று) காலை அவர் தனது சொந்த கிராமத்தில் வாக்களிப்பார்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE