சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் ரவுடிகள்: நடவடிக்கையை தீவிரப்படுத்திய காவல் துறை

By செய்திப்பிரிவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டாலும், உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை, எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அருண் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். அவர் வகித்து வந்த சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி பணி, தலைமையிட கூடுதல் டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு வழங்கப்பட்டது. முதல் கட்டமாக ரவுடிகளை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என அருண் மற்றும் டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து ‘ரவுடிகளுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி தரப்படும்’ என அருண் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக சென்னையில் ரவுடிகள் மீதான நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அருண் பதவி ஏற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), அஸ்ரா கார்க் (வடக்கு) ஆகிய இருவருடனும் ஆலோசனை நடத்தினார்.

இதில், சென்னையில் ரவுடிகளின் பட்டியலில் சுமார் 6 ஆயிரம் பேர் இருப்பது தெரியவந்தது. இதில் 758 பேர் சிறையில் உள்ளனர். இவர்கள் தவிர மீதம் உள்ளவர்களை ரவுடிகளின் குற்றச் செயல்களுக்கு தகுந்தவாறு ஏ, ஏ பிளஸ், பி, சி என 4 வகையாக தரம் பிரித்து அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, போலீஸார் ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று எச்சரித்து வருகின்றனர். மேலும் பருந்து செயலி மூலமும் ரவுடிகளை கண்காணிக்கின்றனர். கவனக்குறைவாக செயல்படும் காவல் நிலைய ஆய்வாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சுமார் 21 ஆயிரம் பேர் ரவுடிகள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என அனைத்து காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், மாவட்ட எஸ்பி-க்களுக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் ரவுடிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE