வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் ஆக.15-க்குள் திறக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: கேரள மாநிலம் வைக்கத்தில் புனரமைக்கப்பட்டு வரும் பெரியார் நினைவகத்தை ஆக.15-க்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பார் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தமிழக அரசின் சார்பில் ரூ.8.14 கோடி மதிப்பில் பொதுப்பணித் துறை மூலம் நடைபெற்று வரும் புனரமைப்பு பணி மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது செய்தித்துறை செயலர் எல்.சுப்பிரமணியன், செய்தித்துறை இயக்குநர் ஆர்.வைத்திநாதன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செல்வராஜ், தமிழக அரசின் கேரள மாநில தொடர்பு அலுவலர் ஆர்.உன்னிகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:

ரூ.8.14 கோடி மதிப்பில்: வைக்கம் போராட்டத்தின் நினைவாக, 1985-ம் ஆண்டு கேரள அரசு வழங்கிய நிலத்தில் தமிழக அரசின் சார்பில் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டது. மேலும், அதில் தமிழக அரசின் சார்பில் நூலகம், அவர் பயன்படுத்திய பொருட்கள், அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள், வைக்கப்பட்டிருந்தது.

நினைவகம் கட்டப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆனதால், ரூ.8.14 கோடி மதிப்பில் அதை புனரமைக்க முதல்வர் உத்தரவிட்டார். நூலகமும் விரிவுபடுத்தப்பட்டு அமைக்கப்படவுள்ளது.

மேலும், பெரியாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான அரிய புகைப்படங்களும் இடம்பெற உள்ளன. காலத்தால் அழியாத நினைவு சின்னமாக இது இருக்கும்

தற்போது, 95 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டன. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் முதல்வர் திறந்துவைப்பார்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE