திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சட்டப் பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதாக தற்போது முதல்வராக பதவி வகிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக்குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.

இதையடுத்து, சட்டப்பேரவை உரிமைக்குழு, திமுக எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்தது.இதை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில், சட்டப்பேரவைச் செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “இந்த நோட்டீஸ் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தற்போதைய சட்டப்பேரவைத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்பதால் அதனை அவருடைய முடிவுக்கே விட்டுவிட வேண்டும்” எனக் கூறினார்.

அதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், “சட்டப்பேரவை மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே, ஒன்றோடு ஒன்று தலையீடு செய்யக்கூடாது. உரிமை மீறல் நோட்டீஸ் மீது இறுதி முடிவெடுக்கப்படாத நிலையில், அதில் தலையிட விரும்பவில்லை. அவ்வாறு தலையீடு செய்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும். மேலும், அது மிகவும் ஆபத்தானது. இதுதொடர்பாக புதிதாக அமைந்துள்ள சட்டப்பேரவையின் முடிவுக்கே விட்டுவிடலாம்” என கருத்து தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE