“ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் யார் இருந்தாலும் தண்டனை உறுதி” - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.

இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும், காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE