உண்மை குற்றவாளிகள் இல்லை என விமர்சனம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸின் அடுத்த நகர்வு என்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லைஎன எழுந்து வரும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கைதானவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5-ம்தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்மகும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்துவந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. கொலையாளிகள் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பைஏற்படுத்தியது. அதை அடிப்படையாக வைத்து செம்பியம் காவல்நிலைய போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து துப்பு துலக்கினர்.

முதல் கட்டமாக கொலை தொடர்பாக மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு, அவரது கூட்டாளிகள் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், பெரம்பூர் திருமலை, திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் ராமு என்ற வினோத், அதேபகுதியைச் சேர்ந்த அருள், செல்வராஜ் ஆகியோர் உட்பட 11 பேரைகைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஆற்காடு சுரேஷ்கொலைக்கு பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும்,கொலைக்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என போலீஸார் திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் சிபிஐ விசாரணைக்குமாற்ற வேண்டும் என்றும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். கொலைக்கு மூளையாக செயல்பட்டது ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு எனகூறப்படுகிறது. அவரை காவலில்எடுத்து விசாரித்தால் கொலையாளிகளின் மொத்த விவரமும் தெரியவரும் என போலீஸார் நம்பிக்கையில் உள்ளனர். இதையடுத்து, 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE