“தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர். அவர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழகத்துக்கு பேராபத்து” என நடிகர் ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார். தமிழகம் போராட்ட பூமியானால் தொழில்கள் வராது. இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி கஷ்டப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ரஜினிகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்தேன். அவர்களில் சிலர் பயந்து இருந்தனர். சிலர் பிரமை பிடித்த நிலையில் உள்ளனர். நிறைய பேர் மிகவும் சோகத்தில் உள்ளனர். அவர்களது உறவினர்களைப் பார்க்கும்போது மனதுக்கு ரொம்ப பாரமாக இருக்கிறது.
இதுபோன்ற ஒரு சம்பவம் இனிமேல் நடக்கக்கூடாது. ஒரு நல்ல காரியத்துக்காக 100 நாள் போராடினார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குடியிருப்பு ஆகியவற்றை தீவைத்து எரித்தது சாதாரண மக்கள் கிடையாது. நிச்சயமாக விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். அவர்களது வேலைதான் இது. போராட்டம் நடத்தும்போது பொதுமக்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் ரொம்ப அதிகமாகிவிட்டனர்.
ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்
இந்த புனிதமான போராட்டத்தில் வெற்றி கிடைத்தால்கூட ரத்தக் கறையோடு முடிந்துள்ளது. அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு விஷக் கிருமிகள், சமூக விரோதிகளை அடக்க வேண்டும். இந்த விஷயத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். சமூக விரோதிகளை, விஷக் கிருமிகளை இரும்புக்கரத்தால் அவர் அடக்கி வைத்திருந்தார். தற்போதுள்ள அரசும் இந்த விஷயத்தில் அவரைப் பின்பற்றி அவர்களை அடக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகத்துக்கே ரொம்ப ஆபத்து.
ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போடப்பட்டுவிட்டது. இனிமேல் திறக்காது, அதற்கான உத்தரவு போடப்பட்டுவிட்டது என தமிழக அரசு கூறியுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்தார் நீதிமன்றத்துக்கு போனால், அவர்கள் மனிதர்களே கிடையாது. நீதிமன்றத்தில் இருப்பவர்கள்கூட மனிதர்கள்தான். எனவே, அங்கே போனாலும் ஜெயிக்காது, ஜெயிக்கவும் விடக்கூடாது. மக்கள் சக்திக்கு முன்னால் எந்த சக்தியும் ஒன்றும் செய்ய முடியாது. ஸ்டெர்லைட் நிறுவனத்தார் உண்மையான மனிதர்களாக இருந்தால் இத்தனை உயிர்களை பலிவாங்கி, இத்தனை பேர் அடிபட்டு கிடக்கும்போது மறுபடியும் ஆலையை திறக்க வேண்டும் என்ற நினைப்புக்கூட அவர்களுக்கு வரக்கூடாது.
தொழில்கள் வராது
தமிழகத்தில் அடிக்கடி போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கிறது. சிலர் நல்லதுக்காக போராடுகிறார்கள். சிலர் போராட்டங்களை ஊக்குவிக்கிறார்கள். தமிழ்நாடு போராட்ட பூமி மாதிரி இருந்தால் எந்தத் தொழிலும் இங்கே வராது. எந்த வியாபாரிகளும் வரமாட்டார்கள். வேலைவாய்ப்பு கிடைக்காது. இளைஞர்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள். ஏற்கெனவே, இங்கே விவசாயம் கிடையாது, தண்ணீர் கிடையாது. வேலைவாய்ப்பும் இல்லையென்றால் மக்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள்.
எனவே, போராட்டம் நடத்தும்போது ரொம்ப ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். அரசாங்கமும் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும்போது விதிமுறைகள், நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றி கொடுக்க வேண்டும். ஏதாவது பிரச்சினை என்றால் நீதிமன்றங்களை அணுகி தீர்வு காண வேண்டுமே தவிர, போராட்டம், போராட்டம் என்று சொன்னால் ரொம்ப கஷ்டமாயிரும். இதை அரசியல்வாதிகள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
சமூக விரோதிகள் உள்ளே நுழைந்ததை கவனிக்காதது உளவுத் துறையின் பெரிய தவறு. சிலர் எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார்கள். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு எதுவும் தெரியாது என அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தெரியும். நேரம் வரும்போது தங்கள் நியாயத்தை காட்டுவார்கள்.
சும்மா விடக்கூடாது
துப்பாக்கிச் சூடு தொடர்பாக முழுமையாக குழப்பம் உள்ளது. இவ்வளவு மக்கள் வருவார்கள், வன்முறை நடக்கும் என காவல் துறையினர் எதிர்பார்க்கவில்லை. காவல் துறையினர் மீது கை வைத்தவர்களை மட்டும் விடக்கூடாது என உறுதியாக கூறுகிறேன். இப்படியே காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் மக்களை காப்பாற்றப் போவது யார்?
வீடியோ ஆதாரங்கள் உள்ளன. உளவுத் துறை தகவல்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்த்து யார் காவலர்களை அடித்தார்கள், யார் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்களது பெயர்களை, புகைப்படங்களை பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் வெளியிட வேண்டும். சமூக விரோதிகள் என அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
ராஜினாமா அரசியல்
எல்லா விஷயத்துக்கும் முதல்வர் ராஜினாமா என்றால் அது சரியில்லை. அந்த அரசியலை நான் விரும்பவில்லை. தூத்துக்குடியில் நடந்தது மிகப்பெரிய தவறு. 13 உயிர்கள் போயிருக்கின்றன. சட்டம், ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது என்பது 100 சதவீதம் உண்மை. இனிமேலாவது அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழக அரசு அமைத்துள்ள ஒருநபர் விசாரணை ஆணையம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. 100 நாட்கள் போராட்டம் நடந்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு அலட்சியமே காரணம். இந்த சம்பவம் தமிழக அரசுக்கு பெரிய பாடம்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
தமிழகமே சுடுகாடாகிவிடும்
தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் கடைசி நேரத்தில் சமூக விரோதிகள் புகுந்துதான் போராட்டத்தைக் கெடுத்தனர். சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசிநாள் எப்படி சமூக விரோதிகள் புகுந்து கெடுத்தனரோ அதுபோலத்தான் தூத்துக்குடியிலும் கெடுத்துள்ளனர். மீனவர்களும், அப்பாவி மக்களும் போராடும்போது சமூக விரோதிகள் புகுந்து காவல்துறையினரைத் தாக்கினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். குடியிருப்புக்கும் அவர்கள்தான் தீ வைத்தனர்.
சமூக விரோதிகள் யார் என்று எனக்குத் தெரியும். அவர்களைக் கண்டுபிடித்து மக்கள் மத்தியில் காட்டுவதுடன் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க வேண்டும். காவல்துறையினரை தாக்கிய பிறகுதான் பிரச்சினை ஆரம்பித்தது. காவல்துறையினரை தாக்குவதை நான் எப்போதும் ஒப்புக் கொள்ளமாட்டேன். தமிழகத்தில் எடுத்ததற்கெல்லாம் போராட்டம், போராட்டம் என்று போய்க் கொண்டிருந்தால் நாடே சுடுகாடாகிவிடும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago