வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் கூலிப்படைகளாக மாறுகின்றனர்: டிடிவி தினகரன் வருத்தம்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: “வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தீயவர்களிடம் சிக்கி கூலிப்படைகளாக மாறிவருகின்றனர். காவல்துறையினரும் இந்த ஆட்சியின்மீது மிகுந்த வருத்தத்துடன் உள்ளனர். பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை” என்று விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

அந்தவகையில் இன்று (ஜூலை 07) பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார்,

அப்போது அவர் பேசியதாவது: “இந்த தேர்தல் ஆளும்கட்சிக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் நிலையை நீங்கள் உருவாக்கவேண்டும். இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சி ஜெயிக்கும் என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மாற்றிகாட்டியது.

மத்திய அரசின் திட்டங்களை பெற்று தர பாமகவை ஆதரிக்கவேண்டும். திமுக ஆட்சிக்கு வரும் முன் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ்நாடு போதை பொருள் விற்கும் சந்தையாக மாறியுள்ளது. இங்கு கூலிப்படை ஆட்சிதான் நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தீயவர்களிடம் சிக்கி கூலிப்படைகளாக மாறிவருகின்றனர். காவல்துறையினரும் இந்த ஆட்சியின்மீது மிகுந்த வருத்தத்துடன் உள்ளனர். பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு பிஹாரை போல மாறிவிடும் வாய்ப்புள்ளது. வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு தாலியை பறிப்பதாக மக்கள் கூறுகின்றனர்” இவ்வாறு டிடிவி. தினகரன் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE