“தமிழகத்தில் 31 நாட்களில் 133 படுகொலைகள் நடந்துள்ளன” - சீமான் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. செல்வாக்கு பெற்ற மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஞாயிற்று கிழமை ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. செல்வாக்கு பெற்ற மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் முன் வைத்த தத்துவம் மரணித்து போகாது. சரண் அடைந்தவர்களை விசாரித்து ஏன் எதற்காக கொலை செய்தார்கள் எனக் கண்டறிந்தார்களா? குற்றவாளிகள் சரண் அடைந்தார்களா? கைது செய்யப்பட்டார்களா. அந்த உண்மையை முதலில் கூறுங்கள். வீட்டு வாசலில் வந்து ஒரு தலைவரை வெட்டிக் கொன்று விடலாம் என்ற துணிவு வருகிறது என்றால் அது எப்படி?...

நீங்கள் ஒரு துப்பாக்கி கொடுத்திருந்தால் அதை அவர் எடுத்துக் காட்டியிருந்தாலே வந்தவர்கள் ஓடியிருப்பார்கள். அவரின் உயிருக்கு ஆபத்து என தெரிந்தபோது, காவல்துறை அவருக்கு உரிய பாதுகாப்பு தந்திருக்க வேண்டும்.

எங்கள் மாநிலத்திலேயே ஆகச்சிறந்த காவல்துறை, உளவுத்துறை உள்ளது. எங்கள் மண்ணின் மைந்தன் மரணத்தை எங்கள் மாநில காவல்துறையே கண்டுபிடிப்பதுதான் சரியானது. சிபிஐ இதுவரை எந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு கண்டுபிடித்துள்ளது?. ஆம்ஸ்ட்ராங்கின் மீது மத்திய அரசுக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE