பிரான்ஸ் 2-ம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்வம் காட்டாத பிரெஞ்சு குடியுரிமைவாசிகள் @ புதுச்சேரி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. முதல் சுற்றில் குறைந்த வாக்கே பதிவானது. இந்நிலையில் முதல் சுற்றில் அதிகம் வாக்குகள் பெற்ற இருவருக்கு வாக்களிக்க இன்று (ஞாயிற்று கிழமை) 2ம் கட்டத்தேர்தல் நடக்கிறது. இதில், குறைந்த மக்களே வாக்களிக்க வந்தனர்.

பிரான்ஸ் உள்பட 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரி, காரைக்கால், சென்னை, கேரளப் பகுதிகளிலும் அதற்கான வாக்குப்பதிவு பிரான்ஸ் நாட்டுத் தூதரகம் சார்பில் நடத்தப்பட்டது. அதன்படி பிரான்ஸில் ஜோர்டான்பார்டிலா கட்சியானது 31.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அதையடுத்து அக்கட்சிக்கு 30 உறுப்பினர்கள் தேர்வாகினர். அக்கட்சிக்கு அடுத்ததாக பிரான்ஸின் தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்சியானது 13.83 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அக்கட்சிக்கு 13 உறுப்பினர்கள் தேர்வாகினர்.

இமானுவேல் மேக்ரான் கட்சியின் உறுப்பினர் குறைவாக தேர்வான நிலையில் பிரான்ஸ் ஐரோப்பிய மக்களவை கலைக்கப்பட்டது. அதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்தலில் பிரான்ஸுக்கு வெளியே வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய தாங்கள் குடியிருக்கும் நாட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழகம், புதுச்சேரி, கேரளத்தில் உள்ள 4535 பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் வாக்குப்பெட்டியில் வாக்களிக்கவோ, இணையம் மூலம் வாக்களிக்கவும் அழைக்கப்பட்டனர். இந்த ஆண்டு முதல் சுற்றில் 15 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர்.

முதல்சுற்றில் மொத்த வாக்காளர்களான 4535 பேரில் 892 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பஜோட் பிராங்க் அதிகளவாக 542 வாக்குகள் பெற்றிருந்தார். அதற்கு அடுத்த நிலையில் ஆனி ஜெனன்ட் ஆகியோர் இருந்தனர். இதில் 12 விழுக்காடு வாக்குபெற்ற இந்த இருவர் பங்கேற்ற இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

இதற்காக பிரெஞ்சு தூதரகம், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் சுற்று வாக்குப்பதிவிலும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை. முதல் சுற்றில் குறைந்த வாக்கே பதிவானது. இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. அதிலும் குறைவானரே வாக்களிக்க வந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE