ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தலைவர்கள் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி: ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொல்லப்பட்டது ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நம்புகிறேன்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: காங்கிரஸ், அதிமுக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தேசியக் கட்சியின்மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழக அரசின் தோல்வியைக் காட்டுகிறது. இதற்கு சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.

அமைச்சர் உதயநிதி: சமூகவிரோதிகளால் ஆம்ஸ்ட்ராங்படுகொலை செய்யப்பட்டதை அறிந்து வேதனையடைந்தேன். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கை தள்ளிய முதல்வருக்கு எனது கடும் கண்டனம். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை முதல்வர் உறுதிசெய்ய வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராகத் தொடரும் தார்மிக உரிமை தனக்கு இருக்கிறதா என்று மு.க.ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: அமைதிப் பூங்காவான தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை நிகழ்த்தும் வன்முறையாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழகத்தின் நலனுக்காக மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசுக்கு அபாய அறிவிப்பாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கு காவல்துறையினர் இடமளிக்கக் கூடாது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் வளர்ந்து வந்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் ஆம்ஸ்ட்ராங். அவரது மறைவு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பிரிவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஆம்ஸ்ட்ராங் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம். தொழில்முறை ரவுடிகள் மீது சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: ஆம்ஸ்ட்ராங் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: சமூக விரோதக் கும்பலின்கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்: இதுபோன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: தேசிய கட்சியின் மாநிலத் தலைவரே வெட்டி படுகொலை செய்யப்படுகிறார் என்றால் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், முன்னாள் முதல்வர்ஓ.பன்னீர்செல்வம், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, அமமுகபொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, வி.கே.சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE