வழக்கறிஞர் முதல் அரசியல் தலைவர் வரை: யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? | HTT Explainer

By செய்திப்பிரிவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது சென்னையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது பின்புலம் இதுதான்...

சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் வசித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். சட்டக் கல்வியை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2000-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கிய அவர், பூவை மூர்த்தியின் தலைமையை ஏற்று, புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தார்.

பூவை மூர்த்தி மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி தனித்து செயல்பட்டு வந்தார். 2006-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த அவர், 2007-ம் ஆண்டு அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2011 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று, அனைவரின் கவனத்தையும் பெற்றார். 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டார்.

படுகொலை பின்னணி என்ன?- மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக நீண்ட காலமாக இருந்த ஆம்ஸ்ட்ராங், வடசென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சட்டப்படிப்பு படித்திருந்த இவர் ஆரம்ப காலத்தில் அடிதடி, மோதல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கினார். பின்னர், நீதிமன்றம் சென்று தன் மீதான அனைத்து வழக்குகளிலும் இருந்து விடுதலையானார்.

இருப்பினும் பழைய குற்ற வழக்குகளில் இவரால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வெவ்வேறு குழுக்களாக செயல்பட்டு அவரை பழிவாங்க காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆம்ஸ்ட்ராங் மிகவும் செல்வாக்கு மிக்கவராக வலம்வந்தார். அவரது ஆதரவாளர்கள் நிழல் போல் 24 மணி நேரமும் உடனிருந்து வந்ததாக தெரிகிறது.

ஆம்ஸ்ட்ராங் யாரை பார்க்க விரும்புகிறாரோ அவரை மட்டும்தான் பார்ப்பார். தன்னை யாரும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாதவாறு கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார். கடந்த 2008-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவருமான மாயாவதியை அதே ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி சென்னை அழைத்து வந்து மிகப் பெரிய அளவில் பேரணி நடத்தி அக்கட்சியினரிடையே நன்மதிப்பை பெற்றார்.

இதனிடையே அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிலர் மற்றும் தொழில் போட்டியாளர்களிடம் இருந்து அவருக்கு அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருந்ததாக தெரிகிறது. இதனால், அவர் பெரும்பாலும் வெளியே வருவதை குறைத்துக் கொண்டார். மிக முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே ஆதரவாளர்கள் புடைசூழ சென்று வந்தார்.

நடந்தது என்ன?- ஆம்ஸ்ட்ராங் வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டினருகே தனது நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அங்கு இருசக்கர வாகனங்களில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கும்பல், மின்னல் வேகத்தில் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே சுற்றிவளைத்து அவரை சரமாரியாக வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றும் ஆம்ஸ்ட்ராங்கால் முடியவில்லை. இந்ததாக்குதலில் நிலை குலைந்த அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர் உடனடியாக ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு கல்வி பயில, தொழில் தொடங்க, அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மிகுந்த சேவை மனப்பான்மையோடு பாடுபட்டவர். இதன் மூலம் அவர்களது நன்மதிப்பையும் பெற்று வந்தார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

10 தனிப்படைகள் அமைப்பு: இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதல் நிலை விசாரணைதான். விசாரணையை மேற்கொண்டு தீவிரப்படுத்தியதும் கொலை குறித்த முழுமையான காரணம் தெரியவரும். 10 தனிப்படைகளை அமைத்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையான தகவல் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

மாயாவதி கடும் கண்டனம்: ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் முதல் செல்வப்பெருந்தகை வரை: ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

அதன்படி, “ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல் துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவுக்கு அவல நிலைக்கு சட்டம் - ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்,” என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

“ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருக்கிறதா? அவருக்கு எதிராக சதி வேலைகள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட தலைவரை எச்சரிக்க வேண்டியதும், சில தருணங்களில் அவரது பாதுகாப்புக்கு அவருக்கே தெரியாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் உளவுத்துறையின் கடமை. ஆனால், உளவுத்துறை செயலிழந்து விட்டது என்பதையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்டுகிறது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஒரு தேசிய கட்சியின் தலைவரே வெட்டி கொலை செய்யப்படுகிறார் என்றால் இன்று சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்ற கேள்வி அனைவரின் மனதில் மிக பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்று பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (வெள்ளிக்கிழமை) எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் முன்பாக கூலிப்படை கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடைபெறும் கொலைச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் உச்சமடைந்திருப்பதை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.
எனவே, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE