“சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்ட இண்டியா கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களியுங்கள்” என்று விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ”விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!
வரும் ஜூலை 10-ஆம் நாள் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல்மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்துக்கு, உங்கள் உள்ளம் கவர்ந்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை! உங்கள் மண்ணின் மைந்தர் அவர்! மக்களோடு மக்களாக, மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர்தான் அன்னியூர் சிவா.
1986-ஆம் ஆண்டு முதல், அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத - நிறம் மாறாத கலைஞரின் உடன்பிறப்புகளில் அவரும் ஒருவர். தலைவர் கலைஞரின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், ”தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கும் ரத்த நாளங்களில் ஒருவர்”.
* விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளராக -
* ஒன்றுபட்ட மாவட்டத் தலைமைப் பொதுக்குழு உறுப்பினராக -
* அன்னியூர் கூட்டுறவு விவசாய வங்கித் தலைவராக -
* மாநில விவசாய அணி துணைச் செயலாளராக என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், தற்போது விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட அன்னியூர் சிவா அவர்களை, விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி வையுங்கள் என்று அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன். அன்போடு மட்டுமல்ல; உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது!
* 1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்கள்.
இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப் போகிறோம்!
* மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.
* ’நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக, இளைஞர்கள் அனைத்து வேலைகளையும் பெற தகுதி உள்ளவர்களாக உயர்த்தப்பட்டு வருகிறார்கள்.
* ‘புதுமைப்பெண் திட்டம்’ மூலமாக, அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக் கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது.
* இதே மாதிரி, மாணவர்களுக்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் மூலமாக தரப் போகிறோம்.
இப்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதாவது ஒரு நேரடி பலன் கிடைக்கும் வகையில், நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றாலே, சமூகநீதி அரசு! இது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்!
* பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்துறையை உருவாக்கியதே தலைவர் கலைஞர்தான்.
* வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு
20 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கிய ஆட்சி, தி.மு.க. ஆட்சி!
* பட்டியலின சமூகங்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்த ஆட்சி, தி.மு.க. ஆட்சி.
* அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை, ‘சமத்துவ நாளாக’ அறிவித்திருக்கிறோம்!
* கழகம் வளர்த்த கொள்கைக் குன்றான ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.
* 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியான சமூகநீதிப் போராளிகளுக்கான நினைவகம் கட்டிக் கொண்டிருக்கிறோம்.
இது இரண்டையும் சீக்கிரமே விழுப்புரத்தில் நான் திறந்து வைக்க இருக்கிறேன்.
* கழகத் துணைப் பொதுச்செயலாளரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி, மறைந்த சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தி இந்த மாவட்டத்துக்கும், தொகுதிக்கும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.
எல்லா மக்களுக்கும் பொதுவான மக்கள் நலத்திட்டங்கள் தொடர, உங்களின் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.
சமூகநீதிக்கு எதிரான பாஜக கூட்டணியை தோற்கடிப்பது மூலமாக, சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கழகத்தின் உண்மைத் தொண்டரான அன்னியூர் சிவா என்ற சிவசண்முகம், விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும் உண்மையான சட்டமன்ற உறுப்பினராக இருப்பார்!
மறவாதீர், உங்கள் சின்னம் உதயசூரியன்! வாக்களிப்பீர் உதயசூரியன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago