சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது உத்தரவை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் மனு

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9-ம் தேதி கைது செய்தனர். டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்கில் கைது செய்தஉத்தரவை ரத்து செய்யக் கோரி, ஜாபர் சாதிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

போதைப் பொருள் கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் மீது தவறான உள் நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான கைதை சட்டப்பூர்வமாக்கும் வகையில், திஹார் சிறையில் உள்ள என்னை கைது செய்வது தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாரண்ட் பெற்றுள்ளது. மேலும், கைது செய்த என்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், கைது தொடர்பான அமலாக்கத் துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு இன்று விசாரிக்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE