ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தால் கலவர காடாக மாறியது தூத்துக்குடி: போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பெண் உட்பட 9 பேர் பலி; காயமடைந்த 77 பேர் மருத்துவமனையில் அனுமதி

By ரெ.ஜாய்சன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயி ரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 போலீஸார் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்கள் கொளுத்தப்பட்டன. தூத்துக்குடி நகரமே கலவர காடாக மாறியது. பதற்றம் நீடிப்பதால் பெருமளவு போலீ ஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தூத்துக்குடி மக் கள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை தோல்வி

இதையடுத்து போராட்டக் குழுவினருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பங்கேற்ற ஒரு தரப்பினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த சம்மதித்தனர். ஆனால், பெரும்பா லான கிராம மக்களும் போராட் டக் குழுவினரும் திட்டமிட்டபடி முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இதையடுத்து, தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர் லைட் ஆலையை உள்ளடக்கிய தென்பாகம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதை மீறி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேரா லய வளாகத்தில் நேற்று காலை 9 மணி முதல் முற்றுகை போராட்டத்துக்காக மக்கள் குவியத் தொடங்கினர். திரேஸ்புரம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். இதை, போலீஸார் தடுக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. தடையை மீறி அவர் கள் முன்னேறினர். விவிடி சந்திப்பு அருகே திருநெல்வேலி சரக டிஐஜி கபில்குமார் சரட்கர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் தடுத்தனர். ஆனால், போலீஸாரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னே றினர். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தினர்.

சிறிது தூரம் பின்வாங்கி ஓடிய அவர்கள், போலீஸார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இதனால், நிலைகுலைந்த போலீஸார் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து, ஊர்வலம் தொடர்ந்து நடந்தது. தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் இருந்தும் சாரை சாரையாக வந்த மக்கள், ஊர்வலத்தில் இணைந்த வண்ணம் இருந்தனர். போலீஸார், அவர்களைத் தடுக்க முடியாமல் திணறினர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே எஸ்பிக்கள் மகேந்திரன், அருண்சக்திகுமார் தலைமையிலான போலீஸார் ஊர்வலமாக வந்தவர்களை மீண்டும் தடுத்தனர். அவர்கள் மீறிச் சென்ற தால் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, 2-வது முறை யாக தடியடி நடத்தினர். பதிலுக்கு போராட்டக்காரர்களும் போலீஸாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். இதில் 12 போலீஸார் காயமடைந்தனர்.

கலவரம் வெடித்தது

கண்ணீர் புகை குண்டுக்கும் கட்டுப்படாமல் ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்றது. ஆட்சியர் அலுவலகத்தை ஊர்வலம் நெருங்கும்போது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். புறவழிச் சாலை பாலம் அருகே 3 மோட்டார் சைக்கிள்களுக்கு சிலர் தீ வைத்தனர். ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்ததால், கலவரம் வெடித்தது. கண்ணீர் புகைகுண்டு வீசியும் தடியடி நடத்தியும் போலீஸாரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அடுத்தடுத்து தீ வைத்தனர். அருகிலுள்ள ஸ்டெர் லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிலர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர். ஆட்சியர் அலுவலகம் மீது சரமாரி யாக கற்களை வீசி தாக்கியதில் கண்ணாடிகள் சேதமடைந்தன.

துப்பாக்கிச் சூடு

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீஸார் ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் மேல் நின்று போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், தூத்துக்குடி புஷ்பா நகர் ரஞ்சித்குமார் (22), லூர்தம்மாள்புரம் கிளாஸ்டன் (40), சிலோன் காலனி கந்தையா (55), லயன்ஸ் டவுன் ஸ்னோலின் (17), குறுக்குச்சாலையைச் சேர்ந்த தமிழரசன் (45), ஆசிரியர் காலனி சண்முகம் (40), தாளமுத்து நகர் அந்தோணி செல்வராஜ் (46), தாமோதர நகர்மணிராஜ் (34) ஆகிய 8 பேர் உயிரிழந்தனர். பலியான ஸ்னோலின் பள்ளி மாணவி ஆவார். 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தமிழரசன் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர்.

மேலும், போராட்டக் குழுவைச் சேர்ந்த 65 பேர் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 12 போலீஸார் காயமடைந்தனர். 77 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போராட்டக்காரர்கள் தீ வைத்த தில் ஆட்சியர் அலுவலக வளாகம், ஸ்டெர்லைட் அலுவலர் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் 40 நான்கு சக்கர வாகனங்களும் கருகி சேதமடைந்தன.

2-வது துப்பாக்கிச் சூடு

இதேபோல, தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள எஸ்பி பங்களா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் திரேஸ்புரத்தைச் சேர்ந்த சேவியர் மனைவி வினிதா (34) பலியானார். இந்த சம்பவங்களால் தூத்துக்குடி நகரமே கலவர காடாக மாறியது. நிலைமையை சமாளிக்க வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்