“கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும்” - அன்புமணி

By செய்திப்பிரிவு

சென்னை: விழுப்புரம் அருகே கள்ளச் சாராயம் குடித்து முதியவர் மரணமடைந்திருக்கிறார். இந்நிலையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.குமாரமங்கலம் என்ற இடத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை குடித்த ஜெயராமன் என்ற முதியவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த ஜெயராமனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் இருவரும் விரைவாக நலம் பெற விழைகிறேன்.

கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் கடந்த மாதம் 19-ஆம் தேதி தான் மெத்தனால் கலக்கப்பட்ட நச்சு சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். அந்த பெரும் சோகம் நிகழ்ந்து 10 நாட்களிலேயே , ஜூன் 29-ஆம் நாள் டி.குமாரமங்கலத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்து ஒருவர் உயிரிழந்திருப்பது வேதனையை அதிகரிக்கச் செய்கிறது. கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கள்ளச் சாராய வணிகத்தைக் கட்டுப்படுத்த தீவிர சோதனைகள் நடத்தப்பட்டதாக தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கள்ளக்குறிச்சிக்கு மிக அருகிலேயே எத்தனால் கலக்கப்பட்ட கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே கள்ளச்சாராய விற்பனை தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் கள்ளச் சராயம் குடித்து எவ்வளவு பேர் உயிரிழந்தாலும், கள்ளச் சாராய விற்பனையை கட்டுப்படுத்த மாட்டோம் என்ற மனநிலையில் தமிழக அரசும், காவல்துறையும் இருப்பதையே டி.குமாரமங்கலம் கள்ளச் சாராய சாவு காட்டுகிறது. கள்ளச் சாராய வணிகத்துக்கு ஆளுங்கட்சியின் ஆதரவு இருப்பதற்கு டி.குமாரமங்கலத்தில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்பட்டது தான் சான்று ஆகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து முதியவர் உயிரிழந்தது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால், இதை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. டி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் புதுவையிலிருந்து வாங்கி வந்த மதுவைக் குடித்ததால் தான் முதியவர் ஜெயராமன் உயிரிழந்ததாக காவல்துறை பொய்யான தகவல்களை கூறியுள்ளனர்.

இதை உயிரிழந்த ஜெயராமனின் மருமகன் மறுத்திருப்பதுடன், தங்கள் பகுதியில் கள்ளச் சாராயம் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும்.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராய விற்பனையை திமுக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை; கள்ளச் சாராய வணிகர்களுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டு காவல்துறை விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்பதால் தான் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகள் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். எனவே, கள்ளச் சாராய சாவுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்