கள்ளச் சாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை அறவே ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும், என தலைமைச் செயலர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் நிலையறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்யக்கோரி அதிமுக, பாமக மற்றும் பாஜக சார்பில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா சார்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்தார்,

65 பேர் பலி: அதில், “கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று உடனடி நடவடிக்கையில் இறங்கினார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் உடனடியாக விசாரணை நடத்தவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ள நிலையில், 145 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஒரு நபர் விசாரணை ஆணையம்: விஷச் சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி சிபிசிஐடி போலீஸார் 3 வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு கூடுதல் டிஜிபி உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட எஸ்பி உள்பட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கள்ள சாராயத்தை அறவே தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க அந்த ஆணையத்திடம் கோரப்பட்டுள்ளது.

மரக்காணம் சம்பவத்தின் தொடர்ச்சி அல்ல... இதுவரை சிபிசிஐடி போலீஸார் 6 குழுக்களாக விசாரணை மேற்கொண்டு 132 சாட்சிகளிடம் விசாரித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். விசாரணை விரிவாகவும், துரிதமாகவும் நடைபெற்று வருகிறது. தமிழக டிஜிபி தலைமையில் அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளும் விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடந்தாண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடைபெற்ற விஷச் சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார் அதுதொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவங்களில் சாராயத்தில் 99 சதவீதம் மெத்தனால் கலக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவங்களின் தொடர்ச்சி எனக்கூற முடியாது. நிலைமை கட்டுக்குள் உள்ளது: கள்ளச்சாராய புகார்களை உடனுக்குடன் பெற்று நடவடிக்கையில் இறங்க மாவட்ட எஸ்பி-க்கள் தலைமையில் வாட்ஸ் ஆப் குழுக்கள் இயங்கி வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மெத்தனாலும் கண்காணிக்கப்படுகிறது. தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்காக அவ்வப்போது திடீர் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கள்ளச் சாராய குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்: கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ சட்டப்பேரவையில் மட்டுமே கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்துள்ளார். ஆனால் அவர் இதுதொடர்பாக மாவட்ட நிரவாகத்திடமோ அல்லது எந்த காவல் நிலையத்திலுமோ இதுதொடர்பாக எந்த புகாரும் தரவில்லை.

100-க்கும் மேற்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானங்கள் பெறப்படும்போது அதில் துல்லியமான தகவல்கள் கொண்டவற்றை மட்டுமே பேரவைத் தலைவர் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வார். எஞ்சியவை நிராகரிக்கப்படும். அதேபோன்ற சூழல் தான் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வின் கவன ஈர்ப்பு நோட்டீஸ் விவகாரத்தில் நடந்துள்ளது. சிபிஐ விசாரணை தேவையில்லை: இந்த சம்பவம் நடைபெற்று இரு வாரங்களே ஆன நிலையில் மாநில காவல்துறை இந்த வழக்கை முறையாக விசாரித்து வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அரிதான அல்லது விசாரணையில் முன்னேற்றம் இல்லாத வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியும்.

இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்திலும் புதிதாக திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு கள்ளச் சாராய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்குவதற்கும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த சட்ட திருத்தம் விரைவில் அமலுக்கு வரும். எனவே சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்