சென்னை: கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், சமூகநீதி சார்ந்த விவகாரங்களில் திமுக அரசு மயக்கம் கொள்ளாமல், தடுமாறாமல் செயல்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அனைத்து வகையான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீடு எவ்வாறு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்கு தெளிவான முறையில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அநீதி இழைக்கும் வகையில் திருத்தம் செய்து கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்திருக்கிறார். திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் சமூகநீதிக்கு எதிரான இந்த ஆணை கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இரு கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வுகள் மூலம் 64% இடங்கள் நிரப்பப்பட்டிருக்கும் நிலையில், மீதமுள்ள 36% இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வுகள் அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெற உள்ளன. சில பாடப்பிரிவுகளில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு இடம் இல்லாத நிலையும், சில பாடப் பிரிவுகளில் சேர மாணவர்கள் இல்லாத நிலையும் நிலவும் சூழலில், குறைந்த எண்ணிக்கையில் இடங்கள் உள்ள பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில் கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் ஜூலை 2 ஆம் நாள் பிறப்பித்திருக்கும் அரசாணை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ‘‘கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தபட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்து, அவற்றை நிரப்ப சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம்.
» “69% சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு” - அன்புமணி ராமதாஸ்
» “படிக்கச் சொல்கிறது பாமக... குடிக்கச் சொல்கிறது திமுக!” - விக்கிரவாண்டியில் ராமதாஸ் பிரச்சாரம்
அதேநேரத்தில் பட்டியலின/ பழங்குடியின/ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது’’ என்பது தான் அவர் பிறப்பித்திருக்கும் ஆணையாகும்.
கல்லூரிக் கல்வி இயக்குனர் பிறப்பித்திருக்கும் ஆணை சமூகநீதிக்கு மட்டுமின்றி, விதிமுறைகளுக்கும் எதிரானது ஆகும். அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட வேண்டும்; அரசு கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் ஆகும். அதற்காகத் தான் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு கடந்த மாதமே நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
அந்த நோக்கத்திற்கிணங்க பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நிரப்ப, அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின/பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்புவது சரியானது தான். அதன் மூலம் மாணவர் சேர்க்கை இடங்கள் வீணாவது தடுக்கப்படும். இதே அளவுகோல் தான் பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும்.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்ப அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப அனுமதிப்பது தான் சரியானதாக இருக்கும்.
அதற்கு மாறாக, காலியாக உள்ள பட்டியலின/பழங்குடியினருக்கான இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது என்றால், அந்த இடங்கள் காலியாகவே கிடக்கும்; அவை யாருக்கும் பயன்படாமல் வீணாகி விடும். இது அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட வேண்டும்; அரசு கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அரசின் நோக்கத்திற்கு எதிரானதாகும். அரசின் கொள்கைக்கும், சமூகநீதிக்கும் எதிராக இப்படி ஒரு முடிவை எடுக்க கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்பதே என் வினா.
கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக கடந்த மே 22&ஆம் நாள் அப்போதைய உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திக், அரசாணை (எண்:110) ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன் இணைப்பில் இடம்பெற்றுள்ள 33&ஆம் பத்தியில் பழங்குடியினருக்கான இடங்கள் கடைசி வரை அப்பிரிவினரைக் கொண்டு நிரப்பப்படாமல் இருந்தால், அந்த இடங்களை பட்டியலினத்தவரைக் கொண்டும், அவர்களும் இல்லாவிட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர் மரபினரைக் கொண்டும் நிரப்பலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/சீர்மரபினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் காலியாக இருந்தால், அவை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் காலியாக இருந்தால் அவை பொதுப்போட்டிப் பிரிவினரைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும்.
முஸ்லீம் வகுப்பினருக்கான இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பலாம் என்றும் உயர்கல்வித்துறையின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இதே நடைமுறை தான் அரசு கலைக் கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.
ஆனால், அதற்கு மாறாக பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வேறு எந்தப் பிரிவினரையும் கொண்டு நிரப்பக்கூடாது என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இதன் மூலம், அவர்கள் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு தடுக்கப்படும். இது மிகப்பெரிய சமூக அநீதி. உயர்கல்வித்துறையைப் பொறுத்தவரை அதன் செயலாளர் பிறப்பிக்கும் ஆணை தான் இறுதியானது.
அதை மீறி, இப்படி ஒரு சமூகநீதிக்கு எதிரான ஆணையை பிறப்பிக்கக் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சமூகநீதிக்கு எதிராக செயல்படுவதையே புதிய வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சமூக அநீதி இழைப்பதற்காகவே இப்படி ஓர் ஆணையை கல்லூரி கல்வி இயக்குநர் மூலம் பிறப்பிக்கச் செய்ததா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
கல்லூரிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்படி, அடுத்தக்கட்ட மாணவர் சேர்க்கை வரும் 8 ஆம் நாள் முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கல்லூரிக் கல்வி இயக்குநரின் ஆணை ரத்து செய்யப்பட வேண்டும். மே 22 ஆம் நாளிட்ட உயர்கல்வித்துறை செயலாளரின் ஆணைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சமூகநீதி சார்ந்த விவகாரங்களில் திமுக அரசு மயக்கம் கொள்ளாமல், தடுமாறாமல் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago