ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என ராகுல் காந்தி கேட்கலாமே? - செல்லூர் ராஜு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: “கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி செல்லாதது ஏன்? எனக் கேள்வி கேட்கும் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்குச் செல்லவில்லை? என்றும் கேட்கலாமே” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை பரவை சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஊர்மெச்சிக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று (ஜூலை 2) திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகி உள்ளது. நான் பல்வேறு தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து கோரிக்கை விடுத்து வருகிறேன். அவை எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கைப் போல கிடப்பில் போடப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளாகியும் திமுக அரசு எந்த ஒரு வளர்ச்சி பணியையும் மேற்கொள்ளவில்லை.

சட்டமன்ற தொகுதி வாரியாக 10 நிலுவைத் திட்டங்கள் குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதினோம். 10 நிலுவை திட்டங்களில் ஒரு திட்டத்தைக் கூட முதல்வர் நிறைவேற்றித் தரவில்லை. தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை செய்து தராமல் மக்களிடம் எம்எல்ஏ-க்களை திமுக அரசு பலிகடா ஆக்குகிறது. மதுரை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கக்கூடிய அம்ருத் குடிநீர் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்தவொரு பயனும் இல்லை. தமிழக அரசிடம் பேசி மதுரைக்கான திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் முன் வரவில்லை.

அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் கள்ளச் சாராய விற்பனை நடைபெறவில்லை. இப்போது கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க அனுமதி தரவில்லை. கள்ளச் சாராய மரணங்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முழு பொறுப்பு. கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஏன் நேரில் செல்லவில்லை? கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விதி எண் 56-ன் படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால், விதி எண் 56-ன் படி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசி உள்ளார்.

சட்டமும் விதிமுறைகளும் அனைவருக்கும் சமம் தானே? அப்புறம் எப்படி முதல்வர் சட்டப்பேரவையில் பேசியுள்ளார்? தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார். கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மடியில் கனமில்லை என்றால் கள்ளச் சாராய மரணங்கள் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யலாமே.

சட்டப் பேரவையின் கண்ணியத்தைக் காக்கும் விதமாக கள்ளச் சாராய மரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து வெளியேறினோம். நாங்கள் ஒன்றும் எங்களுடைய சட்டைகளை நாங்களே கிழித்துக்கொண்டு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறவில்லையே?

அரசு விற்பனை செய்யும் மதுபானத்தில் கிக்கு இல்லை என அமைச்சர் துரைமுருகன் பேசியது அமைச்சருக்கு அழகல்ல. திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என கூறுவதற்கு பதிலாக கள்ளச் சாராய ஆட்சி, போதைப் பொருள் ஆட்சி எனக் கூறலாம். அரசு மதுபான கொள்முதலில் வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என தணிக்கைத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எப்படி கேஜ்ரிவால் சிறையில் உள்ளாரோ அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுபான கொள்முதல் ஊழலில் சிறைக்குச் செல்வார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கொள்முதல் ஊழல் தொடர்பாக முதல்வர் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்போம்.

பிரதமர் மோடி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை? எனக் கேட்கும் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்குச் செல்லவில்லை? என கேட்கலாமே, கள்ளக்குறிச்சிக்கு பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் நேரில் சென்றிருக்க வேண்டும். நல்ல தலைவர்கள் இல்லை என விஜய் சொன்னதன் அர்த்தம் வேறு. மாணவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கி சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் அப்படிச் சொல்லியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தயார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாரா? சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிடும். திமுக ஆட்சியில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் போதைக்கு அடிமையாகி விட்டார்கள். திமுக ஆட்சியில் சட்டங்கள் எழுத்துக்களாக மட்டுமே உள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை கல்வி கற்க வெளிநாடு செல்ல உள்ளதற்கு என்னுடைய வாழ்த்துகள். அண்ணாமலை வெளிநாட்டில் நன்றாக கல்வி கற்று தமிழகத்துக்கு வர வேண்டும். தலைவர்களைப் பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை வெளிநாட்டில் அண்ணாமலை கற்று வரவேண்டும்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்