ராமேசுவரம்: இலங்கை தமிழ் தேசிய கூட்ட மைப்பின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் கொழும்புவில் காலமானார். அவருக்கு வயது 91.
இலங்கை திரிகோணமலையில் கடந்த 1933-ல் பிறந்த இரா.சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் சம்பத்தரிசியார் பள்ளி, மொரட்டுவை புனித செபஸ்தியான் பள்ளியில் கல்வி பயின்ற பிறகு, இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். லீலாதேவி என்பவரை திருமணம் செய்த அவருக்கு சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி என 3 பிள்ளைகள் உள்ளனர்.
1956-ம் ஆண்டு இலங்கை தமிழ்அரசுக் கட்சியில் இரா.சம்பந்தன் இணைந்தார். 1977-ல் இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைதமிழர் கட்சி அங்கம் வகித்த தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் திரிகோணமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக எம்.பி. ஆனார்.
தமிழர் விடுதலை கூட்டணியின் பொதுச் செயலாளர், துணைதலைவர், இணை பொருளாளராக வும் பதவி வகித்துள்ளார். கடந்த 2004-ல் இலங்கை தமிழர் கட்சி, அப்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து, இரா.சம்பந்தன் தலைமையில், அந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 22 இடங்களில் வெற்றி பெற்றது.
2009-ல் இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபிறகு,தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், வடக்குமற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்க வேண்டும், தமிழர்களுக்குச் சம உரிமை வழங்க வேண்டும் என்றும் இந்தியா-இலங்கை இரு நாட்டு மீனவர் பிரச்சினை குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தினார்.
அ.அமிர்தலிங்கத்துக்கு பிறகு, எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 2-வது தமிழரான இரா.சம்பந்தன், 2015 - 2018 காலகட்டத்தில் அப்பதவியில் இருந்தார். தனது 68 ஆண்டு கால அரசியல் வாழ்வில் இலங்கைத் தமிழர்கள். முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்.
இந்த நிலையில், வயது மூப்புகாரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இரா.சம்பந்தன் கடந்த 30-ம் தேதி (நேற்று முன்தினம்) இரவு 11 மணி அளவில் காலமானார்.
கொழும்பு பொரளையில் உள்ள மலர் சாலையில் இன்று காலை 9 மணி முதல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. நாளை இலங்கை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் உடல், பின்னர் திரிகோணமலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இரா.சம்பந்தன் மறைவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மோடி, ஸ்டாலின் இரங்கல்: பிரதமர் மோடி: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் சம்பந்தனுடன் ஏற்பட்ட சந்திப்புகளின் இனிமையான நினைவுகளை எப்போதும் போற்றுவேன். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி, கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை ஏற்படுத்த அயராது பாடுபட்டவர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழர்கள், சிங்களவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் மரியாதையையும் பெற்ற தலைவர். இறுதிமூச்சு வரை தமிழ் மக்களின் நலனுக்காகவே சிந்தித்தவர்.
ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்கு பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தனின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago