கல்வராயன் மலையில் கள்ளச் சாராயம் காய்ச்சும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசுகள் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளச் சாராய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. வறுமை காரணமாக கள்ளச் சாராயம் காய்ச்சுவதையே பிரதான தொழிலாக கொண்டுள்ள கல்வராயன் மலையில் வசிக்கும் அடித்தட்டு மக்களின்வாழ்வாதாரம், சமூக பொருளாதாரம் மேம்பட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீபத்தில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கள்ளச் சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ வாழ்நாள் ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.ஆர்.தமிழ்மணி, சில தொலைக்காட்சிகளுக்கு அளித்த நேர்காணலில், ‘‘கல்வராயன் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அதனால், கள்ளச் சாராயம் காய்ச்சுதல், செம்மரம்வெட்டுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களது மறுவாழ்வுக்காக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை’’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.

அவரது இந்த கருத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வு, கல்வராயன் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின்வாழ்வாதாரம், சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளது.

இதுதொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்: கல்வராயன் மலையை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட பகுதிகளில் வசிக்கும் பட்டியலின, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் குறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் தற்போதைய சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கல்வராயன் மலைப் பகுதியை ஒட்டியுள்ள 100 மலைக் கிராமங்கள் சதய கவுண்டன், குரும்ப கவுண்டன், ஆர்ய கவுண்டன் என்ற 3 மலையாளி ஜாகிர்தார்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு அவர்கள் நிர்வாகம் செலுத்தி வந்துள்ளனர். இந்த 100மலைக் கிராமங்களும் கடந்த 1976 ஜூன் 25 வரை இந்தியாவின் ஓர் அங்கமாகவே இல்லை என்பது அதைவிட அதிர்ச்சிகரமானது.

பழைய தென்ஆற்காடு மாவட்டஆட்சியரின் நடவடிக்கைக்கு பிறகே இந்த 100 கிராமங்களும்இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு கடந்த 1996-ம் ஆண்டில்தான் இந்த மலைக் கிராம மக்கள் முதன்முதலாக வாக்களித்து, தங்கள் உரிமையை நிலைநாட்டியுள்ளனர்.

இதன்காரணமாக, இந்த கிராமங்களில் கல்வி, சாலை, குடிநீர்,மின்சாரம், பேருந்து, மருத்துவமனை என எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்பது அதிர்ச்சி கலந்த உண்மை. ஏழ்மை, படிப்பறிவு இன்மை போன்ற பல்வேறு காரணங்களால் இவர்கள் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கை திசைமாறியுள்ளது.

இந்த நிலை மாற வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் நிம்மதியாக வாழ, அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என அரசியலமைப்பு சாசனம்கூறுகிறது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

எனவே, கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, ஏற்றத்தாழ்வு இல்லாத சமூக பொருளாதாரம் உள்ளிட்ட வாழ்வாதார அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தரவேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. குறிப்பாக, இப்பகுதி மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலர், மத்திய மலைவாழ்மக்கள் நலத் துறை, தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை செயலர், தமிழக டிஜிபி, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கை ஒப்புதலுக்காக பொறுப்புதலைமை நீதிபதி ஆர்.மகாதேவ னுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்