மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா மாவட்ட குறுவை பருவத்தில் 4 லட்சம் டன் உணவு உற்பத்தி இழப்பு ஏற்பட வாய்ப்பு

By எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும். இந்த தண்ணீரைக் கொண்டும், வடிமுனை குழாய் உதவியோடும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் டெல்டா பகுதியில் குறுவைப் பருவத்தில் நெல் சாகுபடி சுமார் 4.25 லட்சம் ஏக்கரில் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், டெல்டா மாவட்ட குறுவைசாகுபடிக்கு அணை திறக்கப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் வடிமுனை குழாய் வசதியுள்ள இடங்களில் 2.50லட்சம் ஏக்கரில் மட்டும் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். இதனால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: மேட்டூரில் தண்ணீர் இல்லாததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சாகுபடி பரப்பு முழு அளவை எட்ட இயலாததால் 4 லட்சம் டன் அளவுக்கு உணவு உற்பத்திஇழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஆறுபாதி கல்யாணம்

ஒரு பருவத்தில் சாகுபடி நடைபெறவில்லை என்றால் விவசாயிகளிடையே பணச் சுழற்சி நின்று விடும்.இதனால் பொருளாதார நெருக்கடிஏற்படும். சாகுபடியை நம்பி கடனைவாங்கி முக்கியமான செலவுகளைவிவசாயிகள் மேற்கொள்வர். தற்போது பலருக்கு அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

விவசாய தொழிலாளர்கள், விவசாயப் பணி இல்லாததால், நகரங்களுக்கு வேறு வேலைக்குச் செல்கின்றனர். பெண் தொழிலாளர்கள் வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் முடங்கும் சூழல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE