தனது ஓட்டுநர் ஓய்வு: தானே காரோட்டி வீட்டில் விட்ட கரூர் ஆட்சியர்: குடும்பத்தினர் நெகிழ்ச்சி

By மு.அப்துல் முத்தலீஃப்

 தனக்கு கார் ஓட்டிய டிரைவர், பணி ஓய்வு பெற்ற நாளில்,தனது காரில் அமர வைத்து வீடு வரை காரை ஓட்டிச் சென்று விடை கொடுத்த கரூர் ஆட்சியரின் செயலைப் பார்த்து குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருபவர் அன்பழகன். இவரது கார் ஓட்டுநராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பரமசிவம். கரூரில் தொடர்ந்து பல மாவட்ட ஆட்சியர்களுக்கு டிரைவராகப் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் பரமசிவம் நேற்று பணி ஓய்வு பெற்றார். வழக்கம் போல் நேற்று பணிக்கு வந்தார். மாலை ஆட்சியர் பணி முடித்து அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக ஓட்டுநர் பரமசிவம் காத்திருந்தார்.

மாலை 7 மணிக்கு மேல் பணி முடித்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்த ஆட்சியர் காரில் ஏறி அமர்ந்தார். சக அதிகாரிகள் அவரை வழி அனுப்ப போர்ட்டிகோவில் நின்றனர். அப்போது ஓட்டுநர் பரமசிவம் ஆட்சியரிடம், 'அய்யா நான் நாளை முதல் பணிக்கு வரமாட்டேன்' என்று தெரிவித்தார்.

'ஏன் என்ன பிரச்சினை?' என்று ஆட்சியர் கேட்க, ’அய்யா நாளை நான் ஓய்வு பெறுகிறேன்’ என்று ஓட்டுநர் பரமசிவம் கூறினார். 'இதை ஏன் முன்னரே சொல்லவில்லை?' என்று கூறிய ஆட்சியர் அனைவரையும் மீட்டிங் ஹாலுக்கு வரவழைத்து ஓட்டுநர் பரமசிவத்தை பக்கத்தில் அமரவைத்து மாலை அணிவித்துப் பாராட்டினார்.

பின்னர் பரமசிவம் அனைவரிடமும் பிரியாவிடைபெற்று ஆட்சியரை கடைசி முறையாக அவரது வீட்டில் விட்டுச் செல்லத் தயாரானார். அப்போது ஆட்சியர், 'பரமசிவம், இன்று நான் உங்களுக்கு கார் ஓட்டப்போகிறேன் உங்கள் வீடு எங்கே சொல்லுங்கள்?' என்று கேட்க, 'அய்யா நீங்கள் போய் எனக்கா? நான் உங்களை வீட்டில் இறக்கிவிட்டு என் வீட்டுக்குப் போகிறேன்' என பரமசிவம் மறுத்துள்ளார்.

'ஒன்றும் பிரச்சினை இல்லை. எங்களுக்காக காலம் முழுவதும் காரோட்டிய உங்களுக்காக சில மணி நேரம் நான் கார் ஓட்டக்கூடாதா?' என்று கூறி, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த ஆட்சியர் அன்பழகன் மறக்காமல் சீட் பெல்ட்டைப் போட்டு 'பரமசிவம் உங்கள் வீடு எங்கே இருக்கிறது சொல்லுங்கள்?' என்று கேட்க, 'சார், சில கிலோ மீட்டர் தள்ளி காந்தி கிராமத்தில் வீடு இருக்கிறது' என்று கூறினார்.

பரமசிவம் முன் இருக்கையில் அமர்ந்துக்கொள்ள, உயர் அதிகாரிகள் பின் இருக்கையில் அமர காரை பரமசிவம் வீட்டை நோக்கிச் செலுத்தினார் ஆட்சியர் அன்பழகன். கார் பரமசிவம் வீட்டில் சென்று நின்றவுடன் வெளியே வந்த அவரது குடும்பத்தார் ஓட்டுநர் இருக்கையில் ஆட்சியர் அமர்ந்திருப்பதையும் பக்கத்து இருக்கையில் பரமசிவம் அமர்ந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஒன்றும் பேச முடியாமல் நின்ற அவர்களைப் பார்த்து ஆட்சியர் அன்பழகன், 'வாருங்கள் வீட்டுக்குள் செல்வோம்' என்று அழைத்துச்சென்றார். வீட்டில் அவரது குடும்பத்தாரிடம் நலம் விசாரித்த ஆட்சியர் பரமசிவம் பணி ஓய்வு தனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு என்று தெரிவித்து வாழ்த்திவிட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டுக் கிளம்பினார்.

ஆட்சியரின் இந்த அணுகுமுறையைக் கண்ட ஓட்டுநர் பரமசிவத்தின் குடும்பத்தாரும், அக்கம் பக்கத்தவரும் நெகிழ்ந்து போனார்கள். ஆட்சியர் அன்பழகன் சில மாதங்களுக்கு முன் வயதான மூதாட்டி தனக்கு யாருமே இல்லை, நல்ல சாப்பாடு கூட சாப்பிட்டதில்லை என்று கூற தனது வீட்டிலிருந்து சாப்பாடு செய்து கொண்டுசென்று மூதாட்டியின் குடிசையில் அவருக்குப் பரிமாறி தானும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார். மூதாட்டிக்கு முதியோர் ஓய்வுத்தொகைக்கான ஆணையையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தனது அலுவலகத்தில் பணியாற்றிய எஸ்.ஐ. திருஞானம் 37 ஆண்டுகள் பணி முடித்து நேற்று பணி ஒய்வு பெற்றார். இதற்காக நேற்று மாலை பிரிவு உபச்சார விழா நடைபெற்றது . இந்த விழாவில் காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அனைவரும் கிளம்பிய பின்னர் எஸ்.பி. செல்வராஜ் தன்னுடைய காரில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. திருஞானத்தை தனக்கு இணையாக அமரவைத்து அவருடைய வீட்டிற்கு நேரடியாக அழைத்துச் சென்று கவுரவப்படுத்தி அங்கு குடும்பத்தினருடன் சில நிமிடங்கள் பேசிவிட்டுச் சென்றுள்ளார்.

அதிகாரிகள் தனக்கு கீழ் பணியாற்றுபவர்களிடம் காட்டும் சிறிய அங்கீகாரம் வாழ்நாள் முழுவதும் அவர்கள் நினைவை விட்டு மாறாது. மேல் நாட்டில் பதவியை வைத்து கீழே உள்ளவர்களை உதாசீனமாக நடத்துவது இல்லை. இங்கே பிரிட்டீஷ் கால மனப்பான்மை காரணமாக அரசுத்துறையில் குறிப்பாக காவல்துறையில் இவ்வாறு நடக்கும் போக்கு அதிகம் உண்டு.

அதை மாற்றும் வகையில் முன்னுதாரணத்தை ஏற்படுத்திய கரூர் ஆட்சியர் அன்பழகன், புதுக்கோட்டை எஸ்.பி செல்வராஜ் இருவரும் போற்றுதலுக்குரியவர்களே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்